போலீசார் திருட்டு பட்டம் கட்ட முயற்சிப்பதாக செல்போனில் வீடியோ வெளியிட்டு வாலிபர் ஆற்றில் குதித்து தற்கொலை
போலீசார் திருட்டு பட்டம் கட்ட முயற்சிப்பதாக செல்போனில் வீடியோ வெளியிட்டு வாலிபர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
விஜயாப்புரா:
விஜயாப்புரா அருகே கோல்லாரா என்ற கிராமத்தை சேர்ந்தவர் சோம்நாத் (வயது 26). இவர் விஜயாப்புரா டவுனில் உள்ள கார் பழுது நீக்கும் நிலையத்தில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் அந்த கார் பழுது நீக்கும் நிலையத்திற்கு சப்-இன்ஸ்பெக்டரான சோமேஸ் கெஜ்ஜி என்பவர் காரை பழுதுநீக்க வந்து உள்ளார். அப்போது அவர் காரில் இருந்த ரூ.1 லட்சம் மாயமானதாக தெரிகிறது. அந்த பணத்தை சோம்நாத் எடுத்துவிட்டதாக கூறி அவரை ஏ.பி.எம்.சி. போலீஸ் நிலையத்திற்கு சோமேஸ் அழைத்து சென்று உள்ளார். அங்கு வைத்து சோம்நாத்தை, சோமேஸ் மற்றும் மேலும் 3 சப்-இன்ஸ்பெக்டர்கள் சேர்ந்து தாக்கியதாக தெரிகிறது.
மேலும் ரூ.1 லட்சத்தை தராவிட்டால் கொலை செய்து விடுவோம் என்றும் மிரட்டியதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியே வந்த சோம்நாத் எனக்கு திருட்டு பட்டம் கட்ட போலீஸ்காரர்கள் முயற்சி செய்வதாக கூறி செல்போனில் வீடியோ பேசி வெளியிட்டார். பின்னர் கோல்லாரா கிராமத்தில் ஓடும் கிருஷ்ணா ஆற்றில் குதித்து சோம்நாத் தற்கொலை செய்து கொண்டார்.