கார் என்ஜின் பகுதியில் தொங்கிய வாலிபர்
பெங்களூருவில், திட்டியதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம் அடைந்த பெண் வாலிபரை காரின் முன்பகுதியில் வைத்து பெண் ஒருவர் அபாயகரமாக காரை ஓட்டினார். மேலும் அவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் போலீசில் அந்த பெண் புகார் அளித்துள்ளார்.
பெங்களூரு:-
ஓட்டல் உரிமையாளர்
பெங்களூரு மரியப்பன பாளையாவை சேர்ந்தவர் தர்ஷன்(வயது 31). இவர், பாப்பிரெட்டி பாளையாவில் சொந்தமாக ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். நேற்று காலையில் அவர் தனது வீட்டில் இருந்து காரில் ஓட்டலுக்கு புறப்பட்டு சென்றார். அவருடன் சகோதரர் சுஜன், தர்ஷனின் நண்பர்களான யஷ்வந்த், வினய் ஆகிய 3 பேரும் இருந்தார்கள். ஞானபாரதி அருகே உல்லால் மெயின் ரோட்டில் தர்ஷன் காரில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது சிக்னல் இருந்தாலும், ஒரு பெண் காரை ஓட்டி வந்து தர்ஷன் கார் முன்பாக நிறுத்தியதாக தெரிகிறது. இதுபற்றி கேட்டதற்கு, தர்ஷனை காருக்குள் இருந்தபடியே திட்டிவிட்டு அந்த பெண் காரை ஓட்டி சென்றார். உடனே அந்த காரை தர்ஷன் பின்தொடர்ந்து சென்றார். உல்லால் மெயின் ரோட்டில் வைத்து அந்த பெண்ணின் காரை தர்ஷன், அவரது நண்பர்கள் நிறுத்தினார்கள். தன்னை திட்டியது குறித்து அந்த பெண்ணிடம் தர்ஷன் கேட்டுள்ளார்.
கார் மீது படுத்து கிடந்தபடி...
இதுதொடர்பாக தர்ஷனுக்கும், அந்த பெண்ணுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பெண்ணுடன் வந்தவர்கள் தர்ஷனை திட்டியதுடன் தாக்கவும் முயன்றதாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் காரில் ஏறி செல்ல முயன்றுள்ளனர். உடனே காருக்கு முன்பாக தர்ஷன் போய் நின்றார். ஆனால் தர்ஷன் நிற்பதை பொருட்படுத்தாமல் அந்த பெண் காரை ஓட்டினார். அப்போது கார் தன் மீது ஏறி விடாமல் இருப்பதற்காக, காரின் முன்னால் உள்ள பகுதியில் தர்ஷன் சாய்ந்து விழுந்து படுத்து கொண்டார்.
ஆனாலும் அந்த பெண் காரை நிறுத்தாமல், அங்கிருந்து வேகமாக ஓட்டிச் சென்றார். காரின் முன்பகுதியில் படுத்திருந்த தர்ஷன் கண்ணாடிக்கு கீழே இருக்கும் பகுதியை பிடித்து கொண்டபடி இருந்தார். இதனால் அவர் காரில் இருந்து கீழே விழாமல் இருந்தார். அதே நேரத்தில் அந்த பெண் தர்ஷன் முன்பகுதியில் இருப்பது தெரிந்தும் காரை நிறுத்தாமல் ஒரு கிலோ மீட்டர் தூரம் ஓட்டிச் சென்றார். பின்னர் தர்ஷனின் நண்பர்கள் வந்து காரை நிறுத்தினார்கள். மேலும் தர்ஷனையும் காப்பாற்றினார்கள்.
பெண் மீது வழக்கு
காரின் முன்பகுதியில் படுத்திருந்த தர்ஷன் கீழே விழுந்திருந்தால், டயர் ஏறி உயிர் இழந்திருப்பார். அவர் முன்பகுதியில் படுத்து கொண்டதுடன், கெட்டியாக பிடித்து கொண்டதால், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அதே நேரத்தில் அந்த பெண்ணை தகாத வார்த்தையில் திட்டியதுடன், அவரது கார் கண்ணாடியையும் தர்ஷனும், அவரது நண்பர்களும் உடைத்தார்கள்.
இதுபற்றி ஞானபாரதி போலீஸ் நிலையத்தில் தர்ஷன் புகார் அளித்தார். அதன்பேரில், தர்ஷனை காரின் முன்பகுதியில் வைத்து கொண்டு அபாயகரமாக ஓட்டியதாக பிரியங்கா, அவருடன் இருந்த 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பிரியங்கா மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் லட்சுமண் நிம்பரகி தெரிவித்துள்ளார்.
வாலிபர் மீது பாலியல் வழக்கு
அதே நேரத்தில் தர்ஷன் தன்னை தகாத வார்த்தையில் திட்டியதாகவும், பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவரது நண்பர்கள் கார் கண்ணாடியை உடைத்ததாகவும் ஞானபாரதி போலீஸ் நிலையத்தில் பிரியங்கா புகார் அளித்தார். இதையடுத்து, தர்ஷன் மீது பாலியல் தொல்லை வழக்கும், அவரது நண்பர்கள் வினய், யஷ்வந்த், சகோதரர் சுஜன் மீது தாக்குதல் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதுபோல், பிரியங்காவையும் ஞானபாரதி போலீசார் கைது செய்துள்ளனர்.
தர்ஷன் காரின் முன்பகுதியில் படுத்திருக்கும் நிலையில் பிரியங்கா காரை ஓட்டி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூருவில் கடந்த 17-ந் தேதி மாகடி ரோட்டில் கார் மீது ஸ்கூட்டர் மோதியதை தட்டி கேட்டதற்காக முத்தப்பா என்ற முதியவரை, ஒரு கிலோ மீட்டர் தூரம் சாகில் என்பவர் காரில் இழுத்து சென்றிருந்தார். பெங்களூருவில் தொடரும் சம்பவமாக காரின் முன்பகுதியில் படுத்திருந்தபடி ஓட்டல் உரிமையாளர் சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.