'இன்ஸ்டாகிராமில்' ஆபாசமாக திட்டி குறுந்தகவல் அனுப்பியதால் வாலிபர் படுகொலை


இன்ஸ்டாகிராமில் ஆபாசமாக திட்டி குறுந்தகவல் அனுப்பியதால் வாலிபர் படுகொலை
x

உன்சூர் டவுனில், ‘இன்ஸ்டாகிராமில்' ஆபாசமாக திட்டி குறுந்தகவல் அனுப்பியதால் கத்தியால் குத்தி வாலிபரை கொன்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

மைசூரு:

வாலிபர் கொலை

மைசூரு மாவட்டம் உன்சூர் டவுனை சேர்ந்தவர் பீரேஸ்(வயது 23). இதேபோல் அதேப்பகுதியை சேர்ந்தவர்கள் நிதின் மற்றும் அவரது நண்பர் மனு. பீரேசுக்கும், நிதினுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பீரேஸ், நிதினை இன்ஸ்டாகிராமில் ஆபாசமாக திட்டி குறுந்தகவல் அனுப்பியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த நிதின், பீரேசை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி நேற்றுமுன்தினம் நிதின் மற்றும் அவரது நண்பர் மனு ஆகிய 2 பேரும் சேர்ந்து பீரேசை சமாதானமாக போவதாக கூறி மோட்டார் சைக்கிளில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

பின்னர் அங்கு வைத்து பீரேசை, 2 பேரும் தாங்கள் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுள்ளனர். இதையடுத்து கத்திகுத்து காயம் அடைந்த பீரேசை, அப்பகுதியினர் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக உன்சூர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி பீரேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

வலைவீச்சு

இந்த சம்பவம் அறிந்து உன்சூர் போலீசார் ஆஸ்பத்திரிக்கும், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதில், இன்ஸ்டாகிராமில் ஆபாசமாக திட்டி குறுந்தகவல் அனுப்பியதால் பீரேசை, நிதின் மற்றும் அவரது நண்பர் மனு கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தலைமறைவானது தெரியவந்தது.

இதுகுறித்து உன்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் வலைவீசி தேடிவருகின்றனர்.


Next Story