போலீஸ்காரரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய வாலிபர் துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு


போலீஸ்காரரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய வாலிபர் துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு
x
தினத்தந்தி 6 Nov 2022 12:15 AM IST (Updated: 6 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ரியல் எஸ்டேட் அதிபரை தாக்கிய வழக்கில் பிடிக்க சென்றபோது போலீஸ்காரரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய வாலிபரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுபிடித்தனர்.

சிவமொக்கா;

ரியல் எஸ்டேட் அதிபர்

சிவமொக்கா (மாவட்டம்) பி.எச்.சாலை பகுதியில் வசித்து வருபவர் அசோக் பிரபு. இவர் ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் ஆவார். கடந்த மாதம்(அக்டோபர்) அசோக் பிரபு, சிவமொக்கா டவுன் புர்லே பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக தாக்கினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இந்த தாக்குதலில் அசோக் பிரபு படுகாயம் அடைந்தார். பின்னர் அவர் இதுபற்றி தொட்டபேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

தப்பி ஓடினார்

போலீசார் நடத்திய விசாரணையில் தாக்குதல் சம்பவத்தை அரங்கேற்றியது அதே பகுதியைச் சேர்ந்த அஸ்லாம்(வயது 23) மற்றும் அவரது நண்பர்கள் என்பது தெரியவந்தது. மேலும் அவர் குருபுரா பகுதியில் பதுங்கி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து நேற்று காலையில் தொட்டபேட்டை போலீசார் குருபுரா பகுதிக்கு சென்று அங்கு அஸ்லாம் பதுங்கி இருந்த வீட்டை சுற்றி வளைத்தனர். பின்னர் அவரை சரண் அடைந்து விடும்படி எச்சரித்தனர்.

ஆனால் அவர் அதை கேட்காமல் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அதையடுத்து அவரை போலீஸ்காரர் ரமேஷ் பிடிக்க முயன்றார். அப்போது அஸ்லாம், தன்னிடம் இருந்த கத்தியால் போலீஸ்காரர் ரமேசை குத்திவிட்டு தப்பி ஓடினார்.

துப்பாக்கியால் சுட்டார்

அதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் வசந்த், தன்னிடம் இருந்த துப்பாக்கியால் அஸ்லாமை சரண் அடைந்துவிடும்படி எச்சரித்தார். ஆனால் அவர் கேட்கவில்லை. தொடர்ந்து ஓடினார். அதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் வசந்த், அஸ்லாமின் காலை நோக்கி துப்பாக்கியால் ஒரு ரவுண்டு சுட்டார். இதில் குண்டு அவரது காலில் பாய்ந்தது. இதனால் அவர் சுருண்டு விழுந்தார்.

அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் கத்தியால் குத்தப்பட்டதில் காயம் அடைந்த போலீஸ்காரர் ரமேசும், துப்பாக்கி குண்டு பாய்ந்து காயம் அடைந்த அஸ்லாமும் சிகிச்சைக்காக சிவமொக்கா அரசு மெக்கான் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

வலைவீச்சு

அங்கு அவர்கள் 2 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கைதான அஸ்லாம் மீது கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் உள்பட 9 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய அஸ்லாமின் கூட்டாளிகளை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.


Next Story