மைசூருவில் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து; கட்டிடம் இடிந்து தரைமட்டம்


மைசூருவில் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து; கட்டிடம் இடிந்து தரைமட்டம்
x

மைசூருவில் பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டு கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. இதில் ரூ.1 கோடி பொருட்கள் எரிந்து நாசமானது.

மைசூரு:

பட்டாசு குடோனில் தீ விபத்து

மைசூரு டவுன் ஹெப்பால் தொழிற்பேட்டை பகுதியில் ஏராளமான தொழிற்சாலை உள்ளது. இந்த இடத்தில் ஆனந்த் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையும் இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் பல அறைகள் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தொழிற்சாலை அருகே பட்டாசுகள் மற்றும் பட்டாசு கழிவுகளை சேகரித்து வைக்கும் குடோன் உள்ளது. இந்த தொழிற்சாலையில் தினமும் தொழிலாளிகள் வேலையில் ஈடுபட்டு வருவது வழக்கம். அதன்படி நேற்று காலை வழக்கம்போல தொழிலாளிகள் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதை பார்த்த தொழிலாளிகள் அருகே ெசன்று பார்த்தனர்.

அப்போது திடீரென்று அங்கிருந்த பட்டாசுகள் பயங்கரமாக வெடித்து சிதற தொடங்கியது. இதையடுத்து அந்த குடோன் முழுவதும் தீ பற்றி எரிய தொடங்கியது. இதனால் பதற்றம் அடைந்த தொழிலாளிகள் அலறி அடித்து கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதற்கிடையில் அங்கிருந்த பட்டாசுகள் அனைத்தும் அடுத்தடுத்து அணுகுண்டு போல் பயங்கரமாக டமார் என வெடித்து சிதறியது. இதனால் அங்கிருந்த அறைகள், குடோன் என அந்த தொழிற்சாலையில் இருந்த பல பகுதிகள் பயங்கர சேதம் அடைந்தன. மேலும் பட்டாசுகள் வெடித்து சிதறியது ஏற்பட்ட தீ அருகே இருந்த தொழிற்சாலைக்கு பரவியது. இதனால் தொழிற்சாலையில் இருந்த பட்டாசுகளும் வெடித்து சிதற தொடங்கியது.

அதிகளவு அழுத்தம் கொண்ட வெடி பொருட்கள் வெடித்ததால், அந்த பகுதியில் குண்டு வெடிப்பது போன்று பயங்கர சத்தம் கேட்டது. அந்த பட்டாசுகள் ஒருசேர வெடித்தது பட்டாசு ஆலையின் கட்டிடங்கள் தரைமட்டமானது.

தீயை அணைக்க போராடினர்

இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்த தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த தொழிலாளிகள் வெளியே ஓடி வந்து பார்த்தனர். அப்போது தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இந்த தீ அருகே இருக்கும் தொழிற்சாலைக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் பதற்றம் அடைந்த அந்த பகுதி மக்கள் உடனே இதுகுறித்து ஹெப்பால் போலீசார் மற்றும் தீயணைப்பு துறை வீரர்களுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு 2 வாகனங்களில் விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் தீ கட்டுக்குள் வரவில்லை. தொடர்ந்து எரிந்து கொண்டே இருந்தது. ஆனால் தீயணைப்பு வீரர்கள் பின்வாங்கவில்லை. தீயை அணைக்க தொடர்ந்து போராடினர். இதற்கிடையில் குடோன், தொழிற்சாலை மற்றும் விற்பனை செய்யும் கடைகள் முழுவதும் தீ பிடித்து எரிந்தது. இதனால் கூடுதல் தீயணைப்பு வாகனங்களை போலீசார் வரவழைத்தனர். அதன்படி மேலும் 2 வாகனங்களை வரவழைத்து, போலீசார் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்காக சுமார் 2 மணி நேரம் போராடியதாக கூறப்படுகிறது. இதையடுத்து தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.

ரூ.1 கோடி பொருட்கள் நாசம்

ஆனால் அங்கிருந்த பொருட்கள் எதையும் போலீசாரால் மீட்க முடியவில்லை. அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலாகிவிட்டது. இதுகுறித்து ஹெப்பால் போலீசார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் எப்படி தீ விபத்து ஏற்பட்டது என்பது தெரியவில்லை. மின் கசிவு காரணமாக ஏற்பட்டிருக்கலாமா?, அல்லது யாரேனும் சிகரெட்டை வீசிவிட்டு சென்றதால் விபத்து ஏற்பட்டிருக்கலமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த விபத்தின் போது அதிர்ஷ்டவசமாக தொழிலாளிகள் வெளியே ஓடி வந்துவிட்டதால் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என்று போலீசார் கூறியுள்ளனர். மேலும் இந்த தீ விபத்தில் குடோன் மற்றும் தொழிற்சாலையில் இருந்த ரூ.1 கோடி மதிப்பிலான பட்டாசுகள் மற்றும் பிற பொருட்கள் எரிந்து நாசமானதாக தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த ஹெப்பால் போலீசார் தீ விபத்திற்கான உண்மையான காரணம் பற்றி விசாரித்து வருகின்றனர்.

தீவிர விசாரணை

இதற்கிடையில் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்ட நகர போலீஸ் கமிஷனர் ரமேஷ் ராத்தோடு கூறியதாவது:-

முதற்கட்ட விசாரணையில் தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை. அதுபற்றி விசாரித்து வருகிறோம். இந்த தீ விபத்தில் குடோன் மற்றும் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை, பட்டாசு விற்பனை செய்யும் கடைகள் முழுவதும் எரிந்து சாம்பலானது. தொழிலாளிகளுக்கு எந்த பாதிப்பு ஏற்படவில்லை. தீ முற்றிலும் அணைக்கப்பட்டாலும், பொருட்களை மீட்க முடியவில்லை. சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான பட்டாசுகள் மற்றும் பொருட்கள் எரிந்து சாம்பலாகியிருப்பதாக தெரியவந்துள்ளது. அதே நேரம் தொழிற்சாலையில் உரிமம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சட்டவிரோதமாக செயல்பட்டால் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த விபத்து குறித்து தொழிற்சாலை உரிமையாளர் ஆனந்த் என்பவர் புகார் அளித்துள்ளார். அவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story