புத்தூரில் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து
புத்தூர் அருகே வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது.
மங்களூரு,:-
தீ விபத்து
தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூரை அடுத்த உப்பினங்கடியில் வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. 2 தளங்களை கொண்ட இந்த வணிக வளாகத்தில் அதிகப்படியாக துணிக்கடைகள் தான் உள்ளது. அனைத்து கடைகளும் கண்ணாடிகளை கொண்டு கட்டமைக்கப்பட்டிருந்தது. நேற்று அதிகாலை இந்த வணிக வளாகத்தின் முதல் தளத்தில் இருந்த துணிக்கடை ஒன்றில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதை பார்த்த அக்கம்
பக்கத்தினர், இது குறித்து கடையின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கடையின் உரிமையாளர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன், தீயை அணைக்க முயற்சித்ததார். ஆனால் முடியவில்லை. மாறாக அருகேயிருந்த கடைகளுக்கு தீ பரவியது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளித்தது. இதனால் பதற்றம் அடைந்த வியாபாரிகள், உடனே உப்பினங்கடி போலீசார் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் அளித்தனர்.
ரூ.3 கோடி பொருட்கள் நாசம்
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. கொழுந்துவிட்டு எரிய தொடங்கிய தீ மேல் தளத்திற்கு பரவ தொடங்கியது. இதையடுத்து கூடுதல் வாகனங்களை வரழைத்த தீயணைப்பு படையினர், பல மணி நேரம் போராடினர். அதையடுத்து தீ கட்டுக்குள் வந்தது. இந்த விபத்து குறித்து உப்பினங்கடி போலீசார் விசாரித்தனர்.
அந்த விசாரணையில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருப்பதாக தெரியவந்தது. இந்த விபத்தில் துணிகள், காலணிகள் என ரூ.3 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாகியிருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து கடையின் உரிமையாளர்கள் கொடுத்த புகாரின் ேபரில் உப்பினங்கடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.