செருப்பு கடையில் பயங்கர தீ விபத்து
தாவணகெரேயில் செருப்பு கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் ரூ.6 லட்சம் பொருட்கள் எரிந்து நாசமானது.
சிக்கமகளூரு:-
தாவணகெரே டவுன் பி.பி. ரோட்டில் நாகராஜன் என்பவருக்கு சொந்தமான செருப்பு கடை உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென்று அவரது கடையில் இருந்து கரும்புகை வெளியானது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப்பகுதி மக்கள் உடனடியாக நாகராஜனுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர் கடைக்கு வந்து பார்த்தார். அப்போது கடையில் தீப்பிடித்து எரிந்தது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து போராடி தீயை அணைத்தனர்.
ஆனாலும் அதற்குள் செருப்பு கடையில் இருந்த ரூ.6 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து தாவணகெரே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில், மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.