பயணம் செய்த கல்லூரி மாணவர் தவறி விழுந்து சாவு
தனியார் பஸ் டிரைவர் திடீரென்று பஸ்சை நிறுத்தியதால் படிக்கட்டில் பயணம் செய்த கல்லூரி மாணவர் தவறி விழுந்து சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
மங்களூரு, ஜன.29-
கல்லூரி மாணவர்
உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா அருகே ஹெம்மாடியை அடுத்துள்ள கேட் பெல்தூர் பகுதியை சேர்ந்தவர் சுதீப் (வயது20). இவர் குந்தாப்புரா பகுதியில் உள்ள கல்லூரியில் பி.காம். இறுதியாண்டு படித்து வந்தார். இவர் நேற்று காலை வழக்கம் போல கல்லூரிக்கு தனியார் பஸ்சில் சென்றார். அந்த பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால், சுதீப் அந்த பஸ்சின் படிக்கட்டில் தொங்கியப்படி பயணம் செய்தார்.
இந்த நிலையில் அந்த பஸ் ஹெம்மாடி பகுதியில் நின்று பயணிகளை இறக்கிவிட்டு மீண்டும் புறப்பட்டு சென்றது. அப்போது பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் ெஹம்மாடியை சேர்ந்த பெண் இறங்க முடியாமல் போனது. இதுபற்றி அவர் டிரைவரிடம் தெரிவித்தார்.
கல்லூரி மாணவர்
இந்த நிலையில் ஹெம்மாடியில் இருந்து சிறிது தூரம் சென்றதும் அந்த பெண்ணை இறக்கிவிடுவதற்காக டிரைவர், பஸ்சை திடீரென்று நிறுத்தினார். அப்போது, பஸ்சின் படியில் பயணம் செய்த சுதீப் நிலை தடுமாறி தவறி கீழே விழுந்தார். அந்த சமயத்தில் பஸ்சின் சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியது. இதில் சுதீப் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றி அறிந்ததும் குந்தாப்புரா போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து குந்தாப்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மக்கள் கோரிக்கை
ஹெம்மாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் குந்தாப்புராவில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் படித்து வருகிறார்கள். ஆனால் காலை நேரத்தில் ஹெம்மாடியில் இருந்து குந்தாப்புராவுக்கு போதிய பஸ் வசதி கிடையாது. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் ஒரே ஒரு தனியார் பஸ்சை தான் நம்பி உள்ளனர். அந்த பஸ்சில், படிக்கட்டில் தொங்கியப்படி பயணிகள் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் நிலை உள்ளது.
தற்போது அந்த ஆபத்தான பயணம் கல்லூரி மாணவர் ஒருவரின் உயிரையும் பறித்துள்ளது. இதனால், ஹெம்மாடி-குந்தாப்புரா இடையே காலை மற்றும் மாலை வேளைகளில் கூடுதல் பஸ்களை அரசு இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.