45 ஆண்டு கால போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி
தத்தா பீடத்தில் அர்ச்சகர்களை நியமித்தது 45 ஆண்டு கால போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என்று சி.டி.ர.வி எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
சிக்கமகளூரு:-
அர்ச்சகர்கள் நியமனம்
சிக்கமகளூரு சந்திரதிரிகோண மலையில் பாபாபுடன் கிரி கோவில் உள்ளது. இங்குள்ள தத்தா பீடத்தில் இந்து மற்றும் முஸ்லிம் மக்கள் வழிபாடு நடத்தி வருகிறார்கள். மேலும் இருதரப்பினரும் தத்தா குகைக்கோவிலை சொந்தம் கொண்டாடி வருகிறார்கள். இந்த விவகாரத்தில் தத்தா கோவிலை நிர்வகிக்க 8 பேர் கொண்ட குழுவை நியமித்து மாநில அரசு உத்தரவிட்டது.
இந்த நிலையில் பாபாபுடன் கிரி மலையில் நேற்று தத்தா ஜெயந்தி விழா தொடங்கியது. இதையொட்டி தத்தா பீடத்தில் பூஜை செய்ய 2 அர்ச்சகர்களை நியமித்து 8 பேர் கொண்ட குழு உத்தரவிட்டுள்ளது. இதற்கு இந்து அமைப்பினர் வரவேற்பு தெரிவித்தாலும் மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
45 ஆண்டு கால போராட்டம்
இதுகுறித்து பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளரும், சிக்கமகளூரு தொகுதி எம்.எல்.ஏ.வுமான சி.டி.ரவி நேற்று தனது வீட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தத்தா கோவிலை நிர்வகிக்க 8 பேர் கொண்ட குழுவை மாநில அரசு நியமித்துள்ளது. அந்த குழுவினர் தத்தா பீடத்தில் பூஜை செய்ய 2 அர்ச்சகர்களை நியமித்து உள்ளது. இது 45 ஆண்டு கால போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி. அடுத்தக்கட்ட வெற்றியை அடைய முயற்சி செய்து வருகிறோம். அதற்காக சட்டரீதியான போராட்டங்கள் நடந்து வருகிறது. தத்தா கோவிலை முழுமையாக இந்துக்களிடம் ஒப்படைக்கவேண்டும். அப்போது தான் அது முழுமையாக தத்தா கோவிலாக இருக்கும், பாபாபுடன் கிரியாக இருக்காது.
அனைவரின் ஒத்துழைப்பும் தேவை
நாகேனஹள்ளியில் உள்ள தர்காவை பாபாபுடன்கிரியாக மாற்றி கொள்ள முடியும். முஸ்லிம்கள் அங்கு சென்று தொழுகை செய்து கொள்ளுங்கள். இந்த தத்தா கோவில் இந்துக்களுக்கு உரியது. இதை யாரும் மாற்ற முடியாது.
தத்தா கோவிலை மீட்க அனைவரின் ஒத்துழைப்பும் தேவை. ஏற்கனவே நடந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலர் காவி உடை அணிந்து கலந்துகொண்டனர், அதேபோல ஒத்துழைப்பு வழங்கவேண்டும். காங்கிரஸ் இந்துக்களை ஒடுக்க நினைக்க கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.