கிராம மக்கள் தோண்டிய அகழியில் தவறி விழுந்த காட்டு யானை; 14 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மீட்பு
காட்டு யானைகள் அட்டகாசத்தை தடுக்காததால் கிராம மக்கள் தோண்டிய அகழியில் காட்டு யானை ஒன்று தவறி விழுந்தது. 14 மணி நேர போராட்டத்துக்கு பிறகு அந்த யானை மீட்கப்பட்டது.
ஹாசன்:
வனவிலங்குகள் அட்டகாசம்
ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புராவில் பெரும்பாலான கிராமங்கள் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இதனால், அந்த வனப்பகுதிகளில் இருந்து காட்டு யானைகள், சிறுத்தைகள், புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி கிராமங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. தொடர் கதையாய் நடந்து வரும் வனவிலங்குகளின் அட்டகாசத்தை தடுக்க வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.
ஆனாலும், வனவிலங்குகள் உணவு தேடி கிராமங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்வதுடன், மனிதர்களை கொன்று வருகின்றன. வனவிலங்கு அட்டகாசத்துக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் மக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
பள்ளத்துக்குள் விழுந்த யானை
இந்த நிலையில் சக்லேஷ்புரா அருகே ஒசகொப்பலு பகுதியில் உள்ள விளைநிலங்களில் காட்டு யானைகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வந்துள்ளன. இதனால் விளைச்சல் பாதிக்கப்பட்டு மக்கள் அவதிப்பட்டு வந்தனர். அந்த காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வனத்துறையினரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இந்த நிலையில், காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறாமல் இருக்க அந்தப்பகுதி மக்கள், வனப்பகுதியையொட்டி அகழி தோண்டி இருந்தனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் உணவு தேடி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று, கிராம மக்கள் தோண்டிய 20 அடி பள்ளத்தில் தவறி விழுந்தது. மேலும் அந்த யானை தொடர்ந்து பிளிறிகொண்டே இருந்தது. மேலும் ஆக்ரோஷமாக பிளிறிக்கொண்டு அந்த யானை மேலே ஏற முயன்றது. ஆனால் அந்த யானையால் மேலே ஏற முடியவில்லை.
14 மணி நேர போராட்டத்துக்கு...
இதனை பார்த்த அந்தப்பகுதி மக்கள், உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வனத்துறையினர் விரைந்து வந்து யானையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் 20 அடி பள்ளத்தில் விழுந்ததால் யானையை எளிதாக மீட்க முடியவில்லை. நீண்ட நேர ஆக்ரோஷமாக பிளிறியபடி ஏற முயன்றதால் காட்டு யானையும் சோர்வடைந்தது. இதையடுத்து பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு யானை எளிதாக ஏறி வரும் வகையில், பள்ளத்துக்கு அருகே சமதளமாக தோண்டப்பட்டது.
சுமார் 14 மணி நேர போராட்டத்துக்கு பிறகு காட்டு யானையை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். பள்ளத்தில் விழுந்ததால் காயம் அடைந்த யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர். ஆனால், பள்ளத்தில் இருந்து வெளியே வந்ததும் அந்த யானை வனப்பகுதிக்குள் ஓடிவிட்டது.
வனத்துறையினருடன் வாக்குவாதம்
முன்னதாக யானையை மீட்க வந்த வனத்துறையினருடன் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காட்டு யானை அட்டகாசத்தை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் விளைபயிர்கள் நாசமாவதுடன், உயிருக்கும் அச்சுறுத்தல் இருப்பதாக கூறினர்.
அப்போது அங்கு வந்த போலீசார், கிராம மக்களுடன் சமாதானம் பேசினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.