மின்வேலியில் சிக்கி காட்டு யானை செத்தது


மின்வேலியில் சிக்கி காட்டு யானை செத்தது
x

ஹனூர் அருகே மின்வேலியில் சிக்கி காட்டு யானை செத்தது. இதுதொடர்பாக விவசாயியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கொள்ளேகால்:-

காட்டு யானை அட்டகாசம்

சாம்ராஜ்நகர் மாவட்டம் எலந்தூர் தாலுகாவில் பிளிகிரிரங்கணபெட்டா வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதி ஹனூர் தாலுகா வரை பரந்து விரிந்து காணப்படுகிறது. இந்த நிலையில் ஹனூர் தாலுகா பைலூர் அருகே பிளிகிரிரங்கணபெட்டா வனப்பகுதியில் இருந்து அடிக்கடி வெளியேறி தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் கிராம மக்கள் பீதியில் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் வனப்பகுதியில் இருந்து உணவு தேடி காட்டு யானை ஒன்று வெளியேறியது.

மின்சாரம் தாக்கி செத்தது

அப்போது அந்த காட்டு யானை, அந்த கிராமத்தை சேர்ந்த பிரபாகர் என்பவருக்கு சொந்தமான சோள தோட்டத்துக்குள் நுழைய முயன்றது. ஆனால் வனவிலங்குகளிடம் இருந்து பயிர்களை காக்க பிரபாகர் விளைநிலத்தை சுற்றி வேலி அமைத்து மின் இணைப்பு கொடுத்திருந்தார். அந்த சமயத்தில் வேலியை மிதித்து உள்ளே நுழைய முயன்ற காட்டு யானை மீது மின்சாரம் தாக்கியது.

இதில் அந்த காட்டு யானை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தது. இந்த நிலையில் காட்டு யானை செத்தது பற்றிய தகவல் நேற்று வனத்துறையினருக்கு தெரியவந்தது. இதனால் வனத்துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

விவசாயிக்கு வலைவீச்சு

இதையடுத்து சம்பவ இடத்துக்கு கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு காட்டு யானைக்கு அதேப்பகுதியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் வனத்துறையினர் யானையின் உடலை குழித்தோண்டி புதைத்தனர். இதற்கிடையே விவசாயி பிரபாகர் தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து வனத்துறையினர் ஹனூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபாகரை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story