போலீஸ் வேடமிட்டு பெண்ணிடம் தங்க சங்கலி பறிப்பு
மைசூருவில் போலீஸ் வேடமிட்டு பெண்ணிடம் தங்க சங்கலி பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
மைசூரு:-
குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா சென்னய்யன கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சசிகலா (வயது33). இவர் மைசூரு சரஸ்வதி புரத்தில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் சமையல் வேலை செய்வதற்காக வந்தார். பின்னர் வேலை முடிந்து அவர் கோட்டை கிராமத்தை சேர்ந்த சிவலிங்கா என்பவருடன் மைசூரு ரிங் ரோட்டில் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்தப்பகுதியில் போலீஸ் உடைந்த அணிந்த ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவர் காரில் இருந்த சசிகலா, சிவலிங்கா ஆகியோருடன் நீங்கள் யார்? இங்க என்ன செய்து கொண்டு இருக்கீர்கள் என்று கேட்டு உள்ளார். இதை கேட்டு அவர்கள் பதற்றம் அடைந்தனர். இந்த பதற்றத்தை பயன்படுத்தி கொண்ட போலீஸ் உடை அணிந்த நபர் 2 பேரையும் மிரட்டி ரூ.1000 பணத்தையும், சசிகலாவிடம் இருந்த 9 கிராம் தங்க சங்கிலியையும் வாங்கினார். பின்னர் 2 பேரிடமும் சரஸ்வதிபுரம் போலீஸ் நிலையத்திற்கு வரவேண்டும் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்று உள்ளார். இந்நிலையில் 2 பேருக்கும் போலீஸ் உடை அணிந்து வந்த நபர் மீது சந்தேகம் எழுந்தது. உடனே அவர்கள் சரஸ்வதிபுரம் போலீஸ் நிலையம் சென்று விசாரித்தனர். அப்போது அங்கு போலீஸ் உடை அணிந்து வந்த நபர் போலி போலீஸ் என்பது தெரியவந்தது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனே இது குறித்து புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.