விற்பனை பிரதிநிதியை செருப்பால் அடித்த பெண்; அடுக்குமாடி குடியிருப்பு முன் போராட்டம்-பரபரப்பு
விற்பனை பிரதிநிதியை செருப்பால் அடித்த பெண்
ஹெப்பகோடி:
பெங்களூரு ஹெப்பகோடி போலீஸ் எல்லைக்குட்பட்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பெண் ஒருவர் வசித்து வருகிறார். அவர் வீட்டு உபயோக பொருட்கள் சிலவற்றை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்தார். அந்த பொருட்களை நேற்று காலையில் ஆன்லைன் பொருட்கள் வினியோக நிறுவனத்தில் வேலை பார்க்கும் சீனி என்ற ஊழியர் நேரில் சென்று வழங்கினார். அவர் அந்த பெண் ஆர்டர் செய்த 8 பொருட்களையும் வழங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த பெண் தனக்கு 6 பொருட்கள் மட்டுமே வந்துள்ளதாகக் கூறி பணத்தை தர மறுத்ததாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த பெண், செருப்பால் சீனியை தாக்கினார். இதுபற்றி அறிந்த ஆன்லைன் பொருட்கள் வினியோக ஊழியர்கள் அந்த அடுக்குமாடி குடியிருப்பு முன்பு குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்த ஹெப்பகோடி போலீசார் நேரில் வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து உரிய விசாரணை நடத்துவதாக உறுதி அளித்தனர். அதன்பேரில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.