செல்போனை தோழி திருடியதாக கருதி மகனை கடத்திய பெண்; போலீசார் கடுமையாக எச்சரித்தனர்
பத்ராவதி அருகே தனது செல்போனை தன்னுடைய தோழி திருடிவிட்டதாக கருதி அவரது மகனை பெண் ஒருவர் கடத்திய சம்பவம் நடந்துள்ளது.
சிவமொக்கா;
8 வயது சிறுவன்
சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி அருகே ஒசமனே பகுதியில் ஒரு பெண், தனது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். அந்த பெண்ணுடைய 8 வயது மகன் நேற்று முன்தினம் மாலையில் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தான். திடீரென அந்த சிறுவன் மாயமானான். இதுபற்றி அறிந்த அந்த பெண் பதற்றம் அடைந்தார். பின்னர் அவர் இதுபற்றி பத்ராவதி போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த சிறுவனை ஒரு பெண், தன்னுடன் அழைத்துச் சென்றதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். இதனால் அந்த சிறுவனை அப்பெண் கடத்திச் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தினர். மேலும் சிறுவனை கண்டுபிடித்து மீட்கும் பணியிலும் ஈடுபட்டனர்.
செல்போனை...
இதற்கிடையே சிவமொக்கா ஜெயநகர் போலீஸ் நிலையத்துக்கு ஒரு பெண் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் தன்னுடைய செல்போன் திருடு போனதாகவும், அதை தனது தோழி திருடிக் கொண்டதாகவும், அதுபற்றி தோழியிடம் கேட்டபோது அவர் செல்போனை திருப்பி தர மறுப்பதாகவும் கூறினார்.
மேலும் தன்னுடைய தோழியிடம் இருந்து தனது செல்போனை மீட்டு தரும்படி போலீசாரிடம் அவர் கேட்டுள்ளார். தனது தோழி செல்போனை திருப்பி தராததால் அவருடைய மகனை தான் கடத்தி வைத்திருப்பதாகவும் அவர் போலீசாரிடம் தெரிவித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக அந்த சிறுவனை அழைத்துக் கொண்டு போலீஸ் நிலையத்திற்கு வரும்படி அப்பெண்ணிடம் கூறினர்.
பெற்றோரிடம் ஒப்படைப்பு
அதன்பேரில் அந்த பெண், தான் கடத்தி வைத்திருந்த சிறுவனை அழைத்துக் கொண்டு போலீஸ் நிலையத்துக்கு வந்தார். அப்போது அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த சிறுவன் பத்ராவதியில் கடத்தப்பட்ட சிறுவன் என்பதும், அந்த சிறுவனின் தாய்தான் இந்த பெண்ணுடைய செல்போனை திருடி விட்டதாக குற்றம்சாட்டப்படுவதும் தெரியவந்தது.
இதையடுத்து அந்த பெண்ணிடம் இருந்து போலீசார் சிறுவனை மீட்டனர். பின்னர் செல்போன் திருட்டு போனால் அதை போலீசாரிடம் தெரிவிக்க வேண்டுமே தவிர இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது, குழந்தைகளை கடத்தி வைத்து மிரட்டுவது குற்றம் ஆகும் என்று கூறி அந்த பெண்ணுக்கு அறிவுரை வழங்கினர்.
மேலும் அவருக்கு கடுமையாக எச்சரிக்கை விடுத்து போலீசார் அங்கிருந்து அனுப்பி வைத்தனர். அதையடுத்து போலீசார் சிறுவனை அவனுடைய பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.