அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற பெண் திடீர் சாவு
சிந்தாமணி அரசு ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற பெண் திடீரென்று இறந்ததால் உடலை வைத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
கோலார் தங்கவயல்:
சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகா நீலம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கோபாலகவுடா. இவரது மனைவி நேத்ராவதி(வயது 25). இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இவருக்கு கடந்த மாதம் சிந்தாமணி மகப்பேறு ஆஸ்பத்திரியில் பிரவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு,
அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. அவருக்கு, டாக்டர் ஜெயந்தி அறுவை சிகிச்சை செய்தார். இதைதொடர்ந்து நேத்ராவதிக்கு உடல் நிலை பாதித்துள்ளது. அவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக நேற்று உயிரிழந்தார். இதனால் ஆவேசம் அடைந்த கோபாலகவுடா தனது மனைவியின் இறப்பிற்கு டாக்டர் ஜெயந்தியின் அலட்சியம் தான் காரணம் என்று கூறி உடலை ஆஸ்பத்திரி எதிரில் வைத்து உறவினர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு தொகுதி எம்.எல்.ஏ. ஜி.கே. கிருஷ்ணா ரெட்டி சென்று பாதிக்கப்பட்ட கோபாலகவுடா மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் மந்திரி சுகாதர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளை செல்போனில் தொடர்பு கொண்டு டாக்டர் ஜெயந்தி மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டார். அதன் பின்னர் டாக்டர் ஜெயந்தியை இடைக்கால பணி நீக்கம் செய்திருப்பதாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி மகேஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன் பின்னர், நேத்ராவதியின் உடலை உறவினர்கள் வாங்கிச் சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.