பெங்களூருவில் தனியாக வசித்த பெண் குத்திக் கொலை
பெங்களூருவில் தனியாக வசித்த பெண் குத்திக் கொலை செய்யப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது. தலைமறைவான மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
பெங்களூரு:
தனியாக வசித்து வந்தார்
பெங்களூரு கே.ஆர்.புரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட டி.சி.பாளையாாவில் வசித்து வந்தவர் அம்பிகா (வயது 35). இவரது சொந்த ஊர் ராய்ச்சூர் மாவட்டம் ஆகும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் பெங்களூருவுக்கு வந்து வசித்து வந்தார். கட்டிட வேலை உள்ளிட்ட கூலி வேலைக்கு சென்று அம்பிகா பிழைப்பு நடத்தி வந்தார். அம்பிகா மட்டும் அந்த வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
அவருக்கு 2 குழந்தைகள் உள்ளது. அவர்கள் 2 பேரும் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்த நிலையில் அம்பிகா வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்தது. அம்பிகாவின் வீடும் வெளிப்புறமாக பூட்டி கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் கே.ஆர்.புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து வீட்டுக்கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
குத்திக் கொலை
அப்போது பலத்த கத்திக்குத்து காயங்களுடன் அம்பிகா கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். போலீஸ் விசாரணையில் அவரை மர்மநபர்கள் வயிறு, முதுகில் மர்மநபர்கள் கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்துள்ளது. அவ்வாறு கொலை செய்துவிட்டு கதவை மர்மநபர்கள் பூட்டி சென்றதும் தெரியவந்தது. இதனால் அம்பிகாவுக்கு தெரிந்த நபரே இந்த கொலையில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
அம்பிகாவை கொலை செய்தது யார்? அவர் என்ன காரணத்திற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து கே.ஆர்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.