வீட்டில் தனியாக இருந்த பெண்ணை தூணில் கட்டி வைத்து நகைகள் கொள்ளை
பண்ட்வால் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை மரத்தூணில் கட்டி வைத்து நகைகளை கொள்ளையடித்து முகமூடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
மங்களூரு:
வீட்டில் தனியாக இருந்த பெண்
தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா பரிமாரு கிராமத்தை அடுத்த கடிகனே பகுதியை சேர்ந்தவர் ரோஹித். இவரது மனைவி பவித்ரா. இத்தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் குழந்தைகள் 2 பேரும் மூடுபித்ரியில் நடந்த ஐம்போரி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுவிட்டனர். வீட்டில் பவித்ரா மட்டும் தனியாக இருந்தார் என்று கூறப்படுகிறது.
மாலை நேரம் அவர் குளிப்பதற்காக சென்றபோது, யாரோ வீட்டின் கதவு மற்றும் ஜன்னல் மீது கற்களை வீசியதுபோன்று தோன்றியது. இதையடுத்து சந்தேகம் அடைந்த அவர் கதவை திறந்து வெளியே வந்து
பார்த்தார். யாரும் இல்லை. இதையடுத்து அவர் சமைப்பதற்காக அறைக்கு சென்றபோது, திடீரென்று கதவை திறந்து கொண்டு 2 பேர் உள்ளே நுழைந்தனர். அவர்கள் முகமூடி அணிந்திருந்தனர். கையில் ஆயுதங்கள் வைத்திருந்தனர். பவித்ராவை நெருங்கிய மர்ம நபர்கள் அவரை மடக்கி பிடித்து தாக்கினர்.
தூணில் கட்டி வைத்து கொள்ளை
பின்னர் அவரை வீட்டில் இருந்த மரத்தூணில் கட்டி மர்ம நபர்கள் கழுத்தில் கிடந்த நகையை பறித்தனர். மேலும் வீடு முழுவதும் சோதனை செய்தனர். அந்த சோதனையில் ரூ.4ஆயிரம ரொக்க மற்றும் சில தங்க நகைகள் மட்டும் கிடத்தது. அதை சுருட்டிய மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
இரவு அக்கம் பக்கத்தினர் வீடு வெகுநேரமாக திறந்து கிடந்ததை பார்த்து உள்ளே வந்தனர். அப்போது அங்கு பவித்ரா தூணில் கட்டப்பட்டிருந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் பவித்ராவை மீட்டனர். இது குறித்து பவித்ரா பண்ட்வால் போலீசிற்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசரணை நடத்தினர்.
போலீசார் விசாரணை
பின்னர் இது குறித்து பவித்ரா கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பை போலீசார் வெளியிடவில்லை. தொடர்ந்து
விசாரித்து வருகின்றனர்.