மின்ஊழியரை செருப்பால் தாக்கிய தொழிலாளி


மின்ஊழியரை செருப்பால் தாக்கிய தொழிலாளி
x

கட்டணம் வசூலிக்க வந்தபோது மின்வாரிய ஊழியரை செருப்பால் தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொப்பல்:-

தாக்குதல்

கர்நாடக சட்டசபை தேர்தலில் 135 இடங்களில் வெற்றிபெற்று காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது. இதற்கிடையே தேர்தலின்போது காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகளான பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம், 200 யூனிட் மின்சாரம் இலவசம் வேண்டி பலரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். குறிப்பாக இலவச மின்சாரம் வேண்டி மின்வாரிய ஊழியர்கள் மீது தாக்குதலில் ஈடுபட தொடங்கி உள்ளனர்.

இந்த நிலையில் மின்கட்டணம் வசூலிப்பதற்காக வந்த மின்வாரிய ஊழியரை, ஒருவர் செருப்பால் தாக்கிய சம்பவம் கொப்பலில் நடந்துள்ளது. கொப்பல் மாவட்டம் முனிராபாத் அருகே குகனபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகரய்யா. தொழிலாளி. இவர் தனது வீட்டில் இருந்தார்.

தொழிலாளி கைது

அப்போது அவரது வீட்டிற்கு கெஸ்காம் மின்வாரிய ஊழியர் மின்கட்டணம் வசூலிப்பதற்கு சென்றார். அந்த சமயத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்துவிட்டது. அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் மின்கட்டணம் செலுத்த தேவையில்லை என வாக்குறுதிகள் அளித்துள்ளனர். ஆனால் தற்போது நீங்கள் மின்கட்டணம் செலுத்த கோருகிறீர்கள் என்று கேட்டுள்ளார். அந்த சமயத்தில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், மின்ஊழியரின் கன்னத்தில் சந்திரசேகரய்யா அறைந்தார். மேலும் செருப்பை எடுத்தும் அவரை தாக்கினார்.

இந்த தாக்குதலில் மின்வாரிய ஊழியர் காயம் அடைந்தார். இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் தங்கள் செல்போன்களில் வீடியோ எடுத்தனர். தற்போது அந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து முனிராபாத் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரசேகரய்யாவை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story