சிமெண்டு கல்லால் தாக்கி தொழிலாளி படுகொலை நண்பனுக்காக கொலை செய்த வாலிபருக்கு வலைவீச்சு


சிமெண்டு கல்லால் தாக்கி தொழிலாளி படுகொலை  நண்பனுக்காக கொலை செய்த வாலிபருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 20 Sept 2022 12:15 AM IST (Updated: 20 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் சொத்து விவகாரத்தில் சிமெண்டு கல்லால் தாக்கி தொழிலாளி கொலை செய்யப்பட்டார். நண்பனுக்காக இந்த கொலையை செய்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

பெங்களூரு:

கல்லால் தாக்கி கொலை

பெங்களூரு கே.பி.அக்ரஹாரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மாகடி மெயின் ரோடு, எல்லம்மா கோவில் ரோட்டில் வசித்து வந்தவா் பாலகிருஷ்ணா(வயது 39), தொழிலாளி. நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டின் முன்பாக பாலகிருஷ்ணா நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த நவீன்ராவ் என்பவர் பாலகிருஷ்ணாவை சிமெண்டு கல்லால் கொடூரமாக தாக்கினார். இதில் தலையில் பலத்தகாயம் அடைந்து உயிருக்கு போராடிய பாலகிருஷ்ணா விக்டோரியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அதிகாலையில் அவர் பரிதாபமாக இறந்து விட்டார்.

சொத்து விவகாரத்தில்...

இதுபற்றி தகவல் அறிந்ததும் கே.பி.அக்ரஹாரா போலீசார் சம்பவ இடத்திற்கும், ஆஸ்பத்திரிக்கு சென்று பாலகிருஷ்ணாவின் உடலை கைப்பற்றியும் விசாரித்தனர். முன்னதாக சம்பவ இடத்தை பார்வையிட்டு மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் லட்சுமண் நிம்பரகி விசாரணை நடத்தினார்.

அப்போது சொத்து விவகாரத்தில் பாலகிருஷ்ணா கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. அதாவது வினோத்குமாரின் சகோதரர் தான் பாலகிருஷ்ணா ஆவார். அவரது மற்றொரு சகோதரர் இறந்து விட்டார். அவருடைய மகன் பெயர் நவீன் என்பதாகும். நவீன் தனது தாயுடன் வசித்து வருகிறார். நவீனின் நண்பர் நவீன்ராவ் தான், பாலகிருஷ்ணாவை கொலை செய்தது தெரியவந்துள்ளது.

வாலிபருக்கு வலைவீச்சு

வினோத்குமார் தனது குடும்பத்திற்கு சேர்ந்த வீட்டை பாலகிருஷ்ணா, நவீன் குடும்பத்திற்கு பிரித்து கொடுத்திருந்தார். ஆனாலும் நவீன் தந்தை இறந்து விட்டதால், அந்த வீட்டின் பாகத்தை பாலகிருஷ்ணா கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி நவீன் தனது நண்பரான அதே பகுதியில் வசிக்கும் நவீன்ராவிடம் தெரிவித்திருந்தார். தனது நண்பருக்கு சொந்தமான வீட்டை, அவரது சித்தப்பா பாலகிருஷ்ணா அபகரிக்க முயலுவதாக நினைத்து நேற்று முன்தினம் நள்ளிரவு, பாலகிருஷ்ணாவுடன் தகராறு செய்து, அவரது தலையில் சிமெண்டு கல்லால் தாக்கி நவீன்ராவ் கொலை செய்திருப்பாக துணை போலீஸ் கமிஷனர் லட்சுமண் நிம்பரகி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து வினோத்குமார் கொடுத்த புகாரின் பேரில் கே.பி.அக்ரஹாரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள். மேலும் தலைமறைவாகி விட்ட நவீன்ராவை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த கொலையில் பாலகிருஷ்ணாவின் சகோதரர் மகன் நவீனுக்கு தொடா்பு உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.


Next Story