குடிபோதையில் தகராறு செய்ததால் இரும்பு கம்பியால் தாக்கி தொழிலாளி கொலை; மனைவி, மகன் கைது
பெலகாவியில் குடிபோதையில் தகராறு செய்ததால் தொழிலாளி இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது மனைவி மற்றும் மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெலகாவி:
குடிபோதையில் கணவர் தகராறு
பெலகாவி மாவட்டம் மூடலி தாலுகா கல்லூரு கிராமத்தை சேர்ந்தவர் சந்திரகாந்தா மாவரகர்(வயது 42), கூலித் தொழிலாளி. இவரது மனைவி சாவித்திரி. இந்த தம்பதியின் மகன் சுனில். சந்திரகாந்தாவுக்கு மதுஅருந்தும் பழக்கம் இருந்தது. இதனால் அவர் தினமும் மதுஅருந்திவிட்டு குடிபோதையில் வீட்டுக்கு வந்து மனைவி சாவித்திரியுடன் சண்டை போட்டு வந்துள்ளார்.
நேற்று முன்தினம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கோவிலில் திருவிழா நடைபெற்றது. இதனால் காலையிலேயே மதுஅருந்திவிட்டு சந்திரகாந்தா வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் தனது மனைவியுடன் குடிபோதையில் அவர் தகராறு செய்துள்ளார். அப்போது சாவித்திரியும், சுனிலும் வீட்டில் இருந்து வெளியே செல்லும்படி கூறியுள்ளனர். ஆனால் அவர் மறுத்து விட்டார்.
இரும்பு கம்பியால் தாக்கி கொலை
மாறாக தனது மனைவியை தகாத வார்த்தையில் திட்டியபடி இருந்துள்ளார். இதன் காரணமாக ஆத்திரமடைந்த சாவித்திரி, சுனில் வீட்டில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து சந்திரகாந்தாவின் தலையில் பலமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், அவர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். உடனே அக்கம் பக்கத்தினர் சந்திரகாந்தாவை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் இரவு அவர் பரிதாபமாக இறந்து விட்டார்.
குடிபோதையில் தகராறு செய்ததால் சந்திரகாந்தாவை, அவரது மனைவியும், மகனும் இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து மூடகி போலீசார் வழக்குப்பதிவு செய்து சாவித்திரி, அவரது மகன் சுனிலை கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.