சிவமொக்காவில் 2 போலீசாரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய வாலிபர்
சிவமொக்காவில் திருட்டு வழக்கில் பிடிக்க முயன்றபோது 2 போலீசாரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய வாலிபர்.
சிவமொக்கா;
சிவமொக்கா டவுன் தொட்டபேட்டை போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரர்களாக பணியாற்றி வருபவர்கள் குருநாயக், ரமேஷ். நேற்று முன்தினம் இவர்கள் 2 பேரும் திருட்டு, கொள்ளை வழக்கில் தொடர்புடைய சாகில் குேரஷி(வயது 27) என்பவரை கைது செய்வதற்காக அவரது வீட்டிற்கு சென்றிருந்தனர்.
அப்போது சாகில் குேரஷி போலீஸ்காரர்களை பார்த்தவுடன் அங்கிருந்து தப்பியோடினார். இதையடுத்து 2 பேரும் அவரை துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். அப்போது ஆத்திரம் அடைந்த சாகில், கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து போலீஸ்காரர்களான குருநாயக், ரமேஷ் மீது தாக்கினார்.
இதில் குருநாயக்கிற்கு வயிற்று பகுதியிலும், ரமேசுக்கு நெஞ்சுபகுதியிலும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து சாகில் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகிவிட்டார். இதுபற்றி தொட்டபேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கத்திக்குத்து காயம் அடைந்த 2 போலீசாரையும் மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தொட்டபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சாகில் குரேஷியை வலைவீசி தேடிவருகின்றனர்.