நியமன உறுப்பினர்களுக்கு எதிர்ப்பு டெல்லி மாநகராட்சி கூட்டத்தில் ஆம் ஆத்மி, பா.ஜனதா உறுப்பினர்கள் கைகலப்பு மேயர் தேர்தல் நடத்தாமல் ஒத்திவைப்பு


நியமன உறுப்பினர்களுக்கு எதிர்ப்பு டெல்லி மாநகராட்சி கூட்டத்தில் ஆம் ஆத்மி, பா.ஜனதா உறுப்பினர்கள் கைகலப்பு மேயர் தேர்தல் நடத்தாமல் ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 7 Jan 2023 5:15 AM IST (Updated: 7 Jan 2023 5:15 AM IST)
t-max-icont-min-icon

டெல்லி மாநகராட்சி கூட்டத்தில் ஆம் ஆத்மி, பா.ஜனதா கவுன்சிலர்களுக்கு இடையே கடுமையான மோதல் மற்றும் கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுடெல்லி,

டெல்லி மாநகராட்சிக்கு கடந்த மாதம் நடந்த தேர்தலில், மாநிலத்தை ஆளும் ஆம் ஆத்மி அபார வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 250 வார்டுகளில் 134-ஐ கைப்பற்றி மாநகராட்சியை வசப்படுத்தியது. மாநகராட்சிக்கு நியமன உறுப்பினர்களாக 10 பேரை, டெல்லி துணைநிலை கவர்னர் சக்சேனா நியமித்தார். இதற்கு ஆம் ஆத்மி ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.

இது தொடர்பாக துணைநிலை கவர்னருக்கு முதல்-மந்திரி கெஜ்ரிவாலும் கடிதம் அனுப்பி இருந்தார்.

முதல் கூட்டம்

மாநகராட்சி தேர்தல் நடத்தப்பட்டு ஒரு மாதம் கடந்த நிலையில், மாநகராட்சியின் முதல் கூட்டம் நேற்று நடந்தது. இதில் மேயர் மற்றும் துணை மேயர் தேர்தலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

டெல்லியின் 7 பா.ஜனதா எம்.பி.க்கள், ஆம் ஆத்மியின் 3 மாநிலங்களவை உறுப்பினர்கள் மற்றும் 14 எம்.எல்.ஏ.க்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டு இருந்தனர்.

எனவே அவர்களும் மாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்றனர்.

நியமன உறுப்பினர்களுக்கு எதிர்ப்பு

காலையில் கூட்டம் தொடங்கியதும், மாநகராட்சியின் தற்காலிக மேயராக பா.ஜனதா கவுன்சிலர் சத்ய சர்மா பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டார்.

பின்னர் அவர் நியமன உறுப்பினர் மனோஜ் குமாரை, பதவி பிரமாணம் எடுத்துக் கொள்வதற்காக அழைத்தார்.

உடனே ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவையின் நடுப்பகுதிக்கு சென்று கோஷமிட்டனர். பொது பணிகளில் அனுபவம் இல்லாதவர்களை நியமன உறுப்பினர்களாக நியமித்து இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர். அத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைத்தான் முதலில் பதவிப்பிரமாணம் செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோஷமிட்டனர்.

மேஜை மீது ஏறி கோஷம்

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பா.ஜனதா உறுப்பினர்களும் எதிர் கோஷங்களை எழுப்பினர். இதனால் அவையில் பெரும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.

இதற்கு மத்தியிலும் 4 நியமன உறுப்பினர்கள் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.

ஆனால் ஒரு கட்டத்தில் ஆம் ஆத்மி உறுப்பினர்கள் மேஜை மீது ஏறி கோஷமிட்டனர். குறிப்பாக, பதவி பிரமாணம் செய்து வைத்துக்கொண்டு இருந்த சத்ய சர்மாவின் மேஜை மீதும் ஏறி அவர்கள் துணைநிலை கவர்னருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இதனால் ஆம் ஆத்மி, பா.ஜனதா உறுப்பினர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதுடன், கைகலப்பும் நிகழ்ந்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கூட்டம் ஒத்திவைப்பு

இதைத்தொடர்ந்து மன்ற கூட்டம் ஒரு மணி நேரம் ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் கூடிய போதும் உறுப்பினர்களின் அமளி நீடித்தது. எனவே மன்ற கூட்டத்தை சத்ய சர்மா ஒத்தி வைத்தார்.

இதனால் மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல் நடைபெறாமலேயே கூட்டம் முடிவடைந்தது.

மாநகராட்சி கூட்டம் மீண்டும் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும், அன்று மீதமுள்ள நியமன உறுப்பினர்கள் முதலில் பதவியேற்ற பின்னர், மற்ற உறுப்பினர்கள் பதவியேற்பார்கள் எனவும் சத்ய சர்மா பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

டெல்லி மாநகராட்சியின் முதல் கூட்டத்தில் நடந்த இந்த மோதல், மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக இந்த மேயர் மற்றும் துணை மேயர் தேர்தலை காங்கிரஸ் கட்சி புறக்கணித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story