மடத்தின் நிலத்தை சட்டவிரோதமாக விற்ற வழக்கில் சித்ரதுர்கா மடாதிபதிக்கு பிடிவாரண்டு
மடத்திற்கு சொந்தமான நிலத்தை சட்டவிரோதமாக விற்றதாக சித்ரதுர்கா மடாதிபதிக்கு பிடிவாரண்டு பிறப்பித்து பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு: மடத்திற்கு சொந்தமான நிலத்தை சட்டவிரோதமாக விற்றதாக சித்ரதுர்கா மடாதிபதிக்கு பிடிவாரண்டு பிறப்பித்து பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
குறைந்த விலைக்கு நிலம் விற்பனை
சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள முருக மடத்தின் மடாதிபதியாக இருந்து வருபவர் சிவமூர்த்தி முருகா சரணரு. இவர், மடத்தில் உள்ள சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சித்ரதுர்கா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், மடத்திற்கு சொந்தமான நிலத்தை சட்டவிரோதமாக விற்ற வழக்கில் மடாதிபதிக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ள சம்பவமும் நடந்துள்ளது.
அதாவது முருக மடத்திற்கு சொந்தமாக பெங்களூரு கெங்கேரி அருகே சூலிகெரே கிராமத்தில் 7 ஏக்கர் நிலம் இருந்தது. அந்த நிலத்தை ஆனந்த்குமாருக்கு, மடாதிபதி விற்று இருந்தார். அதாவது ரூ.7 கோடி மதிப்பிலான நிலத்தை வெறும் ரூ.49 லட்சத்திற்கு சட்டவிரோதமாக விற்பனை செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. மடத்திற்கு சொந்தமான நிலத்தை சட்டவிரோதமாக குறைந்த விலைக்கு மடாதிபதி விற்று இருப்பதாக கூறப்பட்டது.
மடாதிபதிக்கு பிடிவாரண்டு
இதுதொடர்பாக துமகூருவை சேர்ந்த பிரகாஷ் என்பவர் கெங்கேரி போலீஸ் நிலையத்தில் மடாதிபதி மீது வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தற்போது பெங்களூரு மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நீதிபதி முன்னிலையில் நடைபெற்று வருகிறது. அதன்படி, நீதிபதி முன்னிலையில் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி முருக மடத்தின் மடாதிபதிக்கு, ஏற்கனவே கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார்.
இதையடுத்து, முருகா மடத்தின் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணருவுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து பெங்களூரு மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கின் விசாரணையை நவம்பர் மாதம் 10-ந் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்துள்ளார்.