கர்நாடகத்தில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது சரியே; உள்துறை மந்திரி அமித்ஷா பேச்சு
கர்நாடகத்தில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்தது சரியே என்று உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.
பெங்களூரு:
நேர்மையான ஆட்சி
பெங்களூரு விதான சவுதாவில் பசவண்ணர், கெம்பேகவுடா சிலைகள் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் உள்துறை மந்திரி அமித்ஷா கலந்துகொண்டு சிலைகளை திறந்து வைத்து பேசியதாவது:-
பெங்களூரு விதான சவுதாவில் பசவண்ணர், கெம்பேகவுடா சிலைகளை அமைத்தது வரலாற்று சிறப்பு மிக்கது. ஜனநாயகத்தை அறிமுகம் செய்த பசவண்ணர், நேர்மையான ஆட்சி நிர்வாகத்தை நடத்திய கெம்பேகவுடா நமது பெருமை மிக்கவர்கள். அவர்கள் சமூக நீதி, அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்தவர்கள். பெங்களூரு திருவிழா நடத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. இதில் கலைஞர்கள், இலக்கியவாதிகள், கலாசார நிகழ்ச்சிகளுக்கு வாய்ப்பு அளித்தது சிறப்பானது ஆகும்.
கொரோனா பரவல்
பிரதமர் மோடியின் சிறப்பான ஆட்சி நிர்வாகத்தால் அன்னிய நேரடி முதலீடுகள் அதிகமாக இந்தியாவுக்கு வந்துள்ளன. பாதுகாப்பு, விண்வெளித்துறையில் கர்நாடகம் முதன்மையான இடத்தில் உள்ளது. பெங்களூரு போன்ற பெரு நகரங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது என்பது பெரும் சவாலாக இருந்தது. அன்றைய முதல்-மந்திரி எடியூரப்பா, தற்போதைய முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆகியோரின் நேர்மையான ஆட்சி நிர்வாகத்தால் அந்த சவாலை வெற்றிகரமாக எதிர்கொள்ளப்பட்டது.
அரசியல் சாசனம் வழங்கியுள்ள இட ஒதுக்கீடு வசதிகளை சில மதங்கள் இதுவரை பயன்படுத்தி வந்தன. மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அரசு நீக்கி உள்ளது. இது சரியானதே. அந்த 4 சதவீத இட ஒதுக்கீட்டை ஒக்கலிகர்கள் மற்றும் லிங்காயத்துகளுக்கு வழங்கியது வரலாற்று சிறப்பு மிக்க முடிவு ஆகும். மோடி பிரதமராவதற்கு முன்பு பொருளாதாரத்தில் இந்தியா 11-வது இடத்தில் இருந்தது. கடந்த 9 ஆண்டுகளில் நமது நாடு 5-வது பொருளாதார பலமிக்க நாடாக உயர்ந்துள்ளது.
இவ்வாறு அமித்ஷா பேசினார்.
கர்நாடகத்தில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது சரிதான் என்று அமித்ஷா கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிர்வாக குழு கூட்டம்
இந்த விழாவை தொடர்ந்து கர்நாடக தேர்தல் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. அமித்ஷா தலைமையில் நடைபெற்ற இந்த கூடடத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா உள்ளிட்ட கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.