தலைமறைவானவர் 4 ஆண்டுக்கு பின் கைது
குற்ற வழக்கில் தலைமறைவானவர் 4 ஆண்டுக்கு பின் கைது செய்யப்பட்டார்.
மங்களூரு-
உத்தர கன்னட மாவட்டம் சிர்சி தாலுகா கவுடள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேச ராமபோவி. இவரை குற்ற வழக்கு ஒன்றில் காவூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மங்களூரு கோர்ட்டு குற்றம் சாட்டப்பட்ட வெங்கடேச ராமபோவிக்கு, 7 ஆண்டு சிறை தண்டனை 4 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியது. பின்னர் அவர் பெலகாவி சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் 2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் சுப்ரீம் கோர்ட்டில் அவர் மேல்முறையீடு செய்து ஜாமீனில் வெளிவந்தார்.
பின்னர் கடந்த 4 ஆண்டுகளாக கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இதையடுத்து அவருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. காவூர் போலீசார் வெங்கடேச ராமபோவியை பல்வேறு இ்டங்களில் தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் காவூர் போலீசாருக்கு, கவுடள்ளி பகுதியில் வெங்கடேச ராமபோவி பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு தலைமறைவாக இருந்த வெங்கடேச ராமபோவியை கைது செய்தனர். பின்னர் அவரை மங்களூரு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.