ஆந்திர ரியல்எஸ்டேட் அதிபருக்கு சொந்தமான ரூ.72 லட்சம் இருந்த காருடன் தலைமறைவான டிரைவர் கைது
ஆந்திர ரியல்எஸ்டேட் அதிபருக்கு சொந்தமான ரூ.72 லட்சம் இருந்த காருடன் தலைமறைவான டிரைவர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு: ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் ஹரீஷ். ரியல்எஸ்டேட் அதிபரான இவர், பெங்களூருவிலும் தொழில் செய்து வருகிறார். கடந்த மாதம் (செப்டம்பர்) 19-ந் தேதி ஆந்திராவில் இருந்து பெங்களூருவுக்கு ஹரீஷ் காரில் வந்திருந்தார். அந்த காரை ஆந்திராவை சேர்ந்த டிரைவர் சந்தோஷ் ஓட்டி வந்திருந்தார். பெங்களூருவில் சில நபர்களை சந்தித்து ரியல்எஸ்டேட் விவகாரம் சம்பந்தமாக ரூ.72 லட்சத்தை ஹரீஷ் வாங்கினார். அந்த பணத்தை ஒரு பையில் வைத்து கொண்டு டிரைவர் சந்தோசுடன் ஆந்திராவுக்கு அவர் புறப்பட்டார். பேடராயனபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மைசூரு சேட்டிலைட் டவுன், மைசூரு ரோடு பகுதியில் காரை நிறுத்திவிட்டு ஹரீஷ் சாப்பிடுவதற்காக சென்றார்.
அப்போது அவர், காரின் பின்பக்க இருக்கையிலேயே ரூ.72 லட்சம் இருந்த பணப்பையை வைத்துவிட்டு சென்றிருந்தார். அந்த சந்தர்ப்பத்தில் காரில் இருந்த டிரைவர் சந்தோஷ், பணம் இருப்பது தெரிந்ததும், அதனை திருடுவதற்கு திட்டமிட்டு ரூ.72 லட்சத்துடன் காரை ஓட்டிச் சென்று விட்டார். இதுகுறித்து பேடராயனபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தோசை தேடிவந்தனர். இந்த நிலையில், தலைமறைவாக இருந்த டிரைவர் சந்தோஷ் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து ரூ.72 லட்சம் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.