தலைமறைவாக இருந்த காதலன் கைது
நேபாளத்தை சேர்ந்த பெண் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த காதலனை போலீசார் கைது செய்தனர்.
ராமமூர்த்திநகர்:-
பெங்களூரு டி.சி. பாளையா பகுதியில் வசித்து வந்தவர் கிருஷ்ண குமாரி (வயது 28). நோபளத்தை சேர்ந்த இவர் உரமாவு பகுதியில் அழகு நிலையம் வைத்து நடத்தி வந்தார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. பின்னர், இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல், ஒரே வீட்டில் கணவன், மனைவி போல் வசித்து வந்தனர். இந்த நிலையில் இருவருக்கும் இடையே நேற்று முன்தினம் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த சந்தோஷ், கிருஷ்ண குமாரியின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர், அவர் அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ராமமூர்த்தி நகர் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த சந்தோஷை தேடி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த சந்தோசை ராமமூர்த்தி நகர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இந்த கொலை குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.