திரிவேணி சங்கமத்தில் பங்கேற்று திரும்பியபோது விபத்து
திரிவேணி சங்கமத்தில் பங்கேற்று திரும்பியபோது விபத்தில் ஏற்பட்டதில் பஸ் சரக்கத்தில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார்.
மண்டியா:
மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை தாலுகாவில் உள்ள அப்பிகரஹள்ளி பகுதியில் உள்ள திரிவேணி சங்கமத்தில் நேற்று முன்தினம் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடந்தது. இறுதி நாளான நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர். இந்த நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பும் பக்தர்களுக்கு அரசு சார்பில் இலவச பஸ் வசதிகள் செய்யப்பட்டிருந்தது. அதன்படி கே.ஆர். பேட்டை செல்லும் பஸ்சில் பயணித்த பெண் ஒருவர் திடீரென்று கால்தவறி படிக்கட்டில் இருந்து கீழே விழுந்தார். அப்போது பஸ் சக்கரத்தில் சிக்கிய பெண் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிருக்காக போராடி கொண்டிருந்தார். இதைப்பார்த்த பொதுமக்கள் அவரை மீட்டு கே.ஆர்.பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக மைசூரு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்துவிட்டது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கே.ஆர்.பேட்டை போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரித்தனர். அதில் விபத்தில் பலியானவர் கே.ஆர்.பேட்டையை அடுத்த அக்கிகொப்பலு கிராமத்தை சேர்ந்த சாகிபீடு வீதியை சேர்ந்த சுசீலாம்மா (வயது 55) என்று தெரியவந்தது. இந்த விபத்து குறித்து கே.ஆர்.பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.