தலித் வாலிபர் தற்கொலைக்கு காரணமாணவர்கள் மீது நடவடிக்கை


தலித் வாலிபர் தற்கொலைக்கு காரணமாணவர்கள் மீது நடவடிக்கை
x
தினத்தந்தி 14 Dec 2022 2:56 AM IST (Updated: 14 Dec 2022 2:56 AM IST)
t-max-icont-min-icon

தலித் வாலிபர் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் வெங்கடராஜா உறுதி அளித்தார்.

கோலார் தங்கவயல்:-

தலித் வாலிபர் தற்கொலை

கோலார் மாவட்டம், முல்பாகல் தாலுகா நங்கலியை அடுத்த பேவஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் உதய் கிரண். இவர்கள் கடந்த 4-ந் தேதி பெத்தாண்டஹள்ளி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் சென்ற காரின் மீது உதய் கிரண் மோட்டார் சைக்கிள் மோதியது. இதை பார்த்த காரில் இருந்த 4 பேர் உதய் கிரணை தாக்கினர். மேலும் அவரை தலித் என்று கூறி அவதூறாக திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் அவமானம் தாங்க முடியாத உதய் கிரண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நங்கிலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு தொடர்பாக நங்கிலி போலீசார் வழக்கு பதிவு செய்து, ராஜூ, சிவராஜ், கோபால கிருஷ்ணா, முனிவெங்கடப்பா ஆகியோரை கைது செய்தனர். இதையடுத்து அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

கலெக்டரிடம் மனு

இதனால் அதிருப்தியடைந்த தலித் சமூதாயத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, பிற சமூதாயத்தை சேர்ந்தவர்களும் பெத்தண்டஹள்ளி பகுதியில் ஒன்று கூடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

அங்கு மாவட்ட கலெக்டர் வெங்கடராஜை சந்தித்த அவர்கள், தங்கள் கோரிக்கை மனுவை வழங்கினர். அதில் தலித் வாலிபர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். அவர்களுக்கு தண்டனைகள் கிடைக்க வழிவகை செய்யவேண்டும் என்று கூறியிருந்தனர். அந்த மனுவை வாங்கிய கலெக்டர் வெங்கடராஜா நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து சென்றனர்.


Next Story