ரூ.10 நாணயத்தை வாங்க மறுக்கும் வியாபாரிகள் மீது நடவடிக்கை-கலெக்டர் அக்ரம் பாஷா எச்சரிக்கை
கோலாரில் ரூ.10 நாணயத்தை வாங்க மறுக்கும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் அக்ரம் பாஷா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோலார் தங்கவயல்:-
ரூ.10 நாணயம் வாங்க மறுப்பு
கர்நாடகத்தில் கடந்த சில மாதங்களாக ரூ.10 நாணயம் செல்லாது என்று வியாபாரிகள் கூறி வருகின்றனர். இதனால் ரூ.10 நாணயம் வைத்திருப்பவர்கள் அண்டை மாநிலமான தமிழகத்திற்கு எடுத்து சென்று அதை ரூபாய் நோட்டுகளாக மாற்றி வருகின்றனர். குறிப்பாக பெங்களூரு, மைசூரு, மண்டியா, சிக்கமகளூரு உள்பட பல மாவட்டங்களில் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் கோலார் மாவட்டத்தில் இதே பிரச்சினை தலை தூக்கியுள்ளது.
கோலார் மார்க்கெட்
உள்பட மாவட்டத்தில் பல இடங்களில் பொதுமக்கள் கடைகளுக்கு சென்று ரூ.10 நாணயம் வழங்கினால், அதை வியாபாரிகள் வாங்க மறுப்பதாக கூறப்படுகிறது. மேலும் திருப்பி கொடுத்துவிடுகின்றனர். இதனால் பொருட்கள் வாங்க வருபவர்கள் வெறும் கையுடன் செல்வதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் ரூ.10 நாணயம் விவகாரம் கோலார் மாவட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, இந்த ரூ.10 நாணயத்திற்கு முடிவு காணவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
இந்தநிலையில் கோலார் மாவட்ட கலெக்டர் அக்ரம் பாஷா இதுகுறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ரிசர்வ் வங்கியில் இருந்துதான் இந்த ரூ.10 நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. அதை பலர் வாங்க மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுவரை எந்த மாநில அரசும் ரூ.10 நாணயம் செல்லாது என்று அறிவிக்கவில்லை. வியாபாரிகள் அவர்களே ஒரு முடிவை வைத்து கொண்டு, ரூ.10 நாணயத்தை வாங்க மறுப்பு தெரிவிக்கின்றனர். மத்திய அரசு மக்களிடையே ஏற்பட்டிருக்கும் சில்லரை தட்டுப்பாட்டிற்கு முடிவு காணவே இந்த ரூ.10 நாணயம் வெளியிடப்பட்டிருக்கிறது.
ஆனால் அதற்கு வியாபாரிகள் தடை செய்வது நியாயம் இல்லை. இது சட்டவிரோத செயல் ஆகும். இனி எந்த வியாபாரியாக இருந்தாலும், பொதுமக்கள் வழங்கும் ரூ.10 நாணயத்தை ஏற்க மறுத்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல வியாபாரிகள் ரூ.10 நாணயத்தை வாங்க மறுத்தால் உடனே பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளிக்கவேண்டும். உடனே அந்த வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.