தேசிய சட்டப்பள்ளியில் கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு வழங்காவிட்டால் நடவடிக்கை
தேசிய சட்டப்பள்ளியில் கன்னடர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபையில் சட்டத்துறை மந்திரி மாதுசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெங்களூரு:-
கர்நாடக பட்ஜெட்
கர்நாடக சட்டசபையின் கூட்டு மற்றும் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 10-ந் தேதி பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாளில் இரு சபைகளின் கூட்டுக் கூட்டத்தில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் கலந்து கொண்டு உரையாற்றினார். அதைத்தொடர்ந்து கடந்த 17-ந் தேதி கர்நாடக பட்ஜெட்டை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் இந்த கூட்டத்தொடரின் 8-வது நாள் கூட்டம் நேற்று காலை 11 மணிக்கு விதான சவுதாவில் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அப்போது பா.ஜனதா உறுப்பினர் சுரேஷ்குமார், பெங்களூருவில் உள்ள தேசிய சட்ட பள்ளியில் கன்னடர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது இல்லை என்று கூறி கேள்வி எழுப்பினார். அதற்கு சட்டத்துறை மந்திரி மாதுசாமி பதிலளிக்கையில் கூறியதாவது:-
நீதி கிடைக்கும்
பெங்களூருவில் தேசிய சட்டப்பள்ளி (நேஷனல்லா ஸ்கூல்) உள்ளது. இதில் கன்னடர்களுக்கு சட்டப்படி 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இந்த விஷயத்தில் அரசு உறுதியாக உள்ளது. நமது குழந்தைகளுக்கு இடஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக உள்ளோம். இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் வருகிற 24-ந் தேதி விசாரணைக்கு வருகிறது. அங்கு நமக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி, நமது கோரிக்கைக்கு ஆதரவாக கருத்து கூறியுள்ளார். பல்வேறு மாநிலங்களில் உள்ள தேசிய சட்ட பள்ளியில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால் கர்நாடகத்தில் மட்டும் அதை ஏன் அமல்படுத்தவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளோம். இந்த வழக்கில் கர்நாடக அரசு சார்பில் வாதிட புகழ் பெற்ற வக்கீல் துஷார் மேத்தாவை நியமித்துள்ளோம். இடஒதுக்கீட்டை மதிக்கவில்லை என்றால் அந்த சட்டப்பள்ளி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டி வரும். நீதித்துறை மீது நமக்கு நம்பிக்கை உள்ளது. நமது நிலம், நீர் உள்ளிட்ட அனைத்தும் அந்த பள்ளிக்கு வழங்கியுள்ளோம். ஆனால் நமது குழந்தைகளுக்கு எப்படி இடஒதுக்கீடு கொடுக்காமல் இருக்க முடியும்?.
இவ்வாறு மாதுசாமி பேசினார்.
நிறுத்த வேண்டும்
முன்னதாக பேசிய உறுப்பினர் சுரேஷ்குமார், 'பெங்களூரில் உள்ள தேசிய சட்டப்பள்ளியில் கர்நாடக மாணவர்களுக்கு சட்டப்படி வழங்க வேண்டிய இட ஒதுக்கீட்டை வழங்குவது இல்லை. தேசிய சட்டப்பள்ளியில் கன்னடர்களுக்கு 25 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று இந்த சபையில் சட்டம் இயற்றப்பட்டது. ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக இதை அந்த கல்லூரி ஆட்சிக்குழு அமல்படுத்தவில்லை. அதனால் அவற்றுக்கு வழங்கும் சலுகைகளை நிறுத்த வேண்டும்' என்றார்.
அதைத்தொடர்ந்து பேசிய முன்னாள் சபாநாயகர் கே.ஜி.போபையா, 'தேசிய சட்டக்கல்லூரியின் அணுகுமுறை, கர்நாடக அரசுக்கு நாங்கள் கட்டுப்பட மாட்டோம் என்பது போல் உள்ளது' என்றார். அதன் பிறகு பேசிய காங்கிரஸ் உறுப்பினர் கிருஷ்ண பைரேகவுடா, 'கர்நாடக அரசு இந்த விஷயத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுத்து கன்னடர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்' என்றார்.