மாம்பழ சாகுபடி விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை-கலெக்டர் வெங்கடராஜாவிடம் மனு
மர்ம நோயால் மாம்பழ சாகுபடியில் நஷ்டம் ஏற்பட்ட விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை வழங்கும்படி விவசாயிகள் தரப்பில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கோலார் தங்கவயல்:
கோலார் மாவட்ட கலெக்டர் வெங்கடராஜாவை நேற்று மாவட்ட மாம்பழ சாகுபடி விவசாய சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர். அப்போது மாம்பழங்கள் சாகுபடி செய்யும் போது மர்மநோய் தாக்கி மாங்காய்கள் அழிந்தால் அதற்கு காப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்து மனு அளித்தனர். அதை தொடர்ந்து சங்க மாவட்ட தலைவர் வெங்கடேஷ் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கோலார் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் மாங்காய், மாம்பழ சாகுபடி செய்து சர்வதேச அளவில் ஏற்றுமதி செய்கிறார்கள். ஆனால், ஒரு சில நேரங்களில் மர்ம நோய் தாக்கி மாங்காய் சாகுபடி முற்றிலும் அழிந்து போகிறது. இதனால், மாங்காய் சாகுபடியை மட்டுமே நம்பி வாழும் விவசாயிகள் பெரும் இழப்புக்கு ஆளாகின்றனர். இதுபோன்ற இழப்புகளால் விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலை செய்ய நேரிடுகிறது. மாங்காய் சாகுபடி செய்யும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதை தடுக்க காப்பீட்டு தொகை கிடைக்க மாவட்ட நிர்வாகம் தேவையான நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை மனு கலெக்டரிடம் அளித்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.