பட்டியலின, பழங்குடியின மக்களின் பிரச்சினைகள் தீர்க்க நடவடிக்கை
மண்டியாவில் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் அஸ்வதி தெரிவித்துள்ளார்.
மண்டியா:
ஆலோசனை கூட்டம்
மண்டியா மாவட்ட பஞ்சாயத்திற்குட்பட்ட காவேரி மண்டபத்தில் சமூக நலத்துறை தரப்பில் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம்-1989 அமல்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் எஸ்.அஸ்வதி கலந்து கொண்டு பேசியபோது கூறியதாவது:-
மண்டியா மாவட்டம் மத்தூர் தாலுகா கொப்பா, சிக்கரசினகெரே மற்றும் மண்டியா தாலுகா துத்து கிராமத்தில் பள்ளி கூடங்கள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் சில கிராமங்களில் பள்ளிக்கூடம் கட்ட நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள தாலுகா மையங்களில் 'புத்த விகாரா மையம்' அமைப்பதற்கு ஆதரவும், எதிர்ப்பும் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து மக்களிடம் கருத்து கேட்டு 'புத்த விகாரா மையம்' அமைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். இதற்காக 3 முதல் 5 ஏக்கர் வரை நிலம் ஒதுக்கீடு செய்யப்படும். இதற்கான பொறுப்பு மாவட்ட துணை கோட்ட அலுவலர்கள் மற்றும் தாசில்தார்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
நடவடிக்கை
அதேபோல ஹூல்லேனஹள்ளி கிராமத்தில் அம்பேத்கர் பவனுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் குடிசைகள் உள்ளன. குடிசையில் வசிப்பவர்களுக்கு மாற்று இடம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் வசித்து வந்த குடிசைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக சிறப்பு கிராம கூட்டத்தை கூட்ட மாவட்ட நிர்வாகிகளுக்கு பரிந்துரை செய்துள்ளேன்.
இதேபோல் மாவட்ட ஆடு மற்றும் கம்பளி வளர்ச்சிக் கழகத்திற்குட்பட்ட கூட்டுறவு சங்கத்தில் நிலவும் குழப்பங்கள் குறித்து விசாரித்து பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கு பிரச்சினை ஏற்படாமல் பார்த்து கொள்ளப்படும். மேலும் அவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.