நடிகர் கிச்சா சுதீப் காங்கிரசில் சேருகிறாரா?


நடிகர் கிச்சா சுதீப் காங்கிரசில் சேருகிறாரா?
x

நடிகர் கிச்சா சுதீப் காங்கிரசில் சேர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூரு:

நடிகர் சுதீப்

கன்னட திரைப்படங்களில் நடித்து வந்த கிச்சா சுதீப், 'நான் ஈ' பன்மொழி படத்தில் நடித்தார். அந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் வெளியாகி வெற்றி பெற்றது. இதன் மூலம் அவா் கர்நாடகம் மட்டுமின்றி தமிழ்நாடு உள்பட பிற மாநிலங்களிலும் பிரபலமடைந்தார். கன்னடத்தில் அவர் முன்னணி கதாநாயக நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார். சமீபத்தில் அவர் நடித்து வெளியான 'விக்ரம் ரோனா' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த நிலையில் அவர் அரசியலுக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக சட்டசபைக்கு இன்னும் 3 மாதங்களில் தேர்தல் நடக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் மக்களிடையே நல்ல பிரபலமாக உள்ள நடிகர்-நடிகைகளை நாட தொடங்கியுள்ளன.

காங்கிரஸ் தலைவர்கள், சுதீப்பை கட்சிக்கு இழுப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆதரவை பெற முடியும்

முன்னாள் எம்.பி.யும், நடிகையுமான ரம்யா மூலம் சுதீப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. ராகுல் காந்தியே நேரடியாக சுதீப்பிடம் தொலைபேசியில் பேசியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதனால் அவர் காங்கிரசில் சேருவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. சுதீப் வால்மீகி நாயக் சமூகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த சமூகம் பழங்குடியினர் பட்டியலில் உள்ளது. அந்த சமூகத்தினர் கர்நாடகத்தில் குறிப்பாக வட கர்நாடகத்தில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ளனர். சுதீப் காங்கிரசில் சேர்ந்தால், அதன் மூலம் அந்த சமூகத்தின் ஆதரவை பெற முடியும் என்று காங்கிரஸ் கருதுகிறது. அவருக்கு ரசிகர்கள் பட்டாளமும் அதிகம். மிக பிரபலமான கன்னட 'பிக் பாஸ்' நிகழ்ச்சியை அவர் தான் தொகுத்து வழங்கி வருகிறார். அந்த நிகழ்ச்சியை அதிக மக்கள் பார்க்கிறார்கள். அதனால் அவரை கட்சிக்கு அழைத்து வந்தால் கூடுதல் பலம் கிடைக்கும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கருதுகிறார்கள். காங்கிரசின் இந்த முயற்சி எந்த அளவுக்கு அக்கட்சிக்கு கைகொடுக்க போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Next Story