சித்தராமையா பங்கேற்ற விழாவில் நடிகர் சுதீப் ரசிகர்கள் ரகளை
வால்மீகி மட நிகழ்ச்சியில் நடிகர் சுதீப் பங்கேற்காததால், சித்தராமையா பங்கேற்ற விழாவில் சுதீப்பின் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர். நாற்காலிகளை உடைத்ததில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
சிக்கமகளூரு:-
வால்மீகி மட ஆண்டு விழா
தாவணகெரே மாவட்டம் ஹரிஹரா தாலுகா ராஜனஹள்ளி கிராமத்தில் வால்மீகி மடம் உள்ளது. நேற்று முன்தினம் வால்மீகி மடத்தின் ஆண்டு விழா நடந்தது. இந்த விழாவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, நடிகர் சுதீப் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மதியம் நடந்த விழாவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்துகொண்டார்.
பின்னர் இரவு 7 மணிக்கு நடந்த விழாவில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பங்கேற்றார். அவருக்கு மடத்தின் சார்பாக வால்மீகியின் சிலை நினைவு பரிசாக வழங்கப்பட்டது. ஆனால் நடிகர் சுதீப் இந்த விழாவில் பங்கேற்றவில்லை.
சுதீப் ரசிகர்கள் ரகளை
இந்த நிலையில், நடிகர் சுதீப் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டதால் அவரது ரசிகர்கள் ஏராளமானோர் இந்த விழாவில் பங்கேற்றிருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் அவர் கலந்துகொள்ளாததால் அவர்கள் ஆத்திரமடைந்தனர். விழாவில் சித்தராமையா பேசி கொண்டிருந்தபோது, நடிகர் சுதீப்பின் ரசிகர்கள் பயங்கரமாக கத்தி கூச்சலிட்டனர். அப்போது அவர்கள் சுதீப் வர வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். அப்போது வால்மீகி மடாதிபதி மேடைக்கு சென்று சுதீப் வருவார் என்று உறுதி அளித்தார்.
ஆனால் நீண்ட நேரமாகியும் சுதீப் வராததால் ஆத்திரமடைந்த அவரது ரசிகர்கள், அங்கிருந்த நாற்காலிகளை உடைத்து ரகளையில் ஈடுபட்டனர். இதனால் விழாவில் பரபரப்பு ஏற்பட்டது.
போலீஸ் தடியடி
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சுதீப் ரசிகர்களை கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால் அவர்கள் அங்கிருந்த இரும்பு வேலியை தள்ளியதுடன் போலீஸ்காரர்கள் மீதும் தாக்கியதாக தெரிகிறது. இதனால் போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினார்கள். இதன்காரணமாக ரகளையில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து சிதறி அடித்து ஓடினார்கள்.
சுதீப் ரசிகர்களின் ரகளையால் போலீஸ்காரர்கள் 3 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் தாவணகெரே அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். முன்னதாக, சுதீப் ரசிகர்கள் கத்தி கூச்சலிட்டபோது சித்தராமையா நிகழ்ச்சியை முடித்து கொண்டு சென்றுவிட்டார். இதுகுறித்து தாவணகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விளக்கம்
விழாவில் நடிகர் சுதீப் பங்கேற்காதது குறித்து விழா கமிட்டியினர் விளக்கம் அளித்துள்ளனர். அதாவது, வால்மீகி மட ஆண்டு விழாவுக்கு நடிகர் சுதீப் தனி ஹெலிகாப்டர் மூலம் வர இருந்தார். ஆனால் பெங்களூருவில் விமான கண்காட்சியையொட்டி ஹெலிகாப்டர் பறக்க தடை விதிக்கப்பட்டதால், சுதீப்பால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை என தெரிவித்தனர்.