நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கு; ரியா சக்ரவர்த்திக்கு எதிரான லுக்-அவுட் நோட்டீஸ் உத்தரவு ரத்து
நீதிபதிகள் ரேவதி மொஹிதே தேரே மற்றும் மஞ்சுஷா தேஷ்பாண்டே ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் இன்று விசாரணைக்கு வந்தது.
புனே,
இந்தி திரையுலகில் வளர்ந்து வந்த இளம் நடிகராக அறியப்பட்டவர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். அவருடைய திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சி அடைய செய்தது. அவருடைய மரணத்தில் உள்ள மர்மம் இன்னும் வெளிவராமல் உள்ளது. வாரிசு நடிகர்களால் பல பட வாய்ப்புகளை அவர் இழந்து போனார் என்றும் கூறப்பட்டது.
இந்த வழக்கில், 2020-ம் ஆண்டு நடிகை ரியா சக்ரவர்த்தி, அவருடைய சகோதரர் ஷோவிக் சக்ரவர்த்தி மற்றும் அவர்களின் தந்தை இந்திரஜித் ஆகியோருக்கு எதிராக, வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதிக்கும் லுக்-அவுட் நோட்டீஸ் உத்தரவை சி.பி.ஐ. அமைப்பு பிறப்பித்து இருந்தது.
இதனை எதிர்த்து மனுதாரர்கள் சார்பில் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுபற்றிய விசாரணை, நீதிபதிகள் ரேவதி மொஹிதே தேரே மற்றும் மஞ்சுஷா தேஷ்பாண்டே ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அவர்கள் இந்த லுக்-அவுட் நோட்டீசுக்கான உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். எனினும், சி.பி.ஐ. சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஸ்ரீராம் ஷிர்சத், இந்த உத்தரவை 4 வார காலத்திற்கு ஒத்தி வைக்கும்படி கோரினார். ஏனெனில், சுப்ரீம் கோர்ட்டில், சி.பி.ஐ. அமைப்பு மேல்முறையீடு செய்ய காலஅவகாசம் தேவைப்படுகிறது என கேட்டு கொண்டார். ஆனால், தடை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க ஐகோர்ட்டு அமர்வு மறுத்து விட்டது.
மும்பையின் பாந்திரா புறநகரில் உள்ள சுஷாந்த் சிங்கின் குடியிருப்பில், கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 14-ந்தேதி அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. அவருடைய மரணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
முதலில், இதனை தற்கொலை வழக்காக பதிவு செய்து மும்பை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். எனினும், அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுப்பப்பட்டது.
இதன்படி, அதே ஆண்டு ஜூலையில் சிங்கின் தந்தை, பீகார் போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், நடிகை ரியா சக்ரவர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் தற்கொலை செய்ய தூண்டினர் என்ற குற்றச்சாட்டை தெரிவித்து இருக்கிறார்.
இந்த வழக்கு பின்னர் சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் இந்த வழக்கை தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில், 2020-ம் ஆண்டு ஆகஸ்டில் ரியா உள்ளிட்ட மூன்று பேருக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், ஷோவிக்குக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட இந்த நோட்டீஸ் உத்தரவு, கடந்த ஆண்டு செப்டம்பரில் தற்காலிக ரத்து செய்யப்பட்டது. இதனால், அவர் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய வழிவகை செய்யப்பட்டது.
சுஷாந்த் சிங்குக்கு போதை பொருள் வாங்கி கொடுத்த வழக்கு ஒன்றின் அடிப்படையில், ரியா மற்றும் ஷோவிக் இருவரையும், கடந்த 2020-ம் ஆண்டு போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். எனினும், பின்னர் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.