சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் கைதான கூடுதல் டி.ஜி.பி. அம்ருத் பால் சிறையில் அடைப்பு
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் கைதான கூடுதல் டி.ஜி.பி. அம்ருத் பால், பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை(சனிக்கிழமை) நடைபெற உள்ளது.
பெங்களூரு: சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் கைதான கூடுதல் டி.ஜி.பி. அம்ருத் பால், பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை(சனிக்கிழமை) நடைபெற உள்ளது.
கூடுதல் டி.ஜி.பி. கைது
கா்நாடகத்தில் நடைபெற்ற 545 சப்-இன்ஸ்பெக்டர் பணிகளுக்கான தேர்வில் நடந்த முறைகேடு குறித்து சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த முறைகேடு வழக்கில் ஆள்சேர்ப்பு பிரிவு முன்னாள் கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்த அம்ருத் பால், கடந்த 4-ந் தேதி கைது செய்யப்பட்டு இருந்தார். அவரை போலீசார் தங்களது காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையின் போது சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு விவகாரத்தில் கூடுதல் டி.ஜி.பி. அம்ருத் பாலுக்கு ரூ.1.35 கோடி கைமாறி இருப்பதாக கோா்ட்டில் தாக்கல் செய்திருந்த அறிக்கையில் போலீசார் தெரிவித்திருந்தனர்.
அதே நேரத்தில் ஆள்சேர்ப்பு நியமன பிரிவில் உள்ள பாதுகாப்பு அறையின் சாவியை துணை போலீஸ் சூப்பிரண்டாக இருந்த சாந்தகுமாரிடம், அம்ருத்பால் கொடுத்ததாக கூறப்பட்டது. அதன்மூலம் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதி இருந்தவர்களின் வினாத்தாளில் திருத்தம் செய்யப்பட்டு, அவர்களை அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற வைத்திருப்பதற்கான தகவலும் போலீசாருக்கு கிடைத்திருந்தது. இதுபற்றி கைதான அம்ருத் பாலிடம் சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.
ஜாமீன் மனு நாளை விசாரணை
இந்த நிலையில், அம்ருத் பாலின் போலீஸ் காவல் நேற்றுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து, பெங்களூரு முதலாவது கூடுதல் மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நீதிபதி முன்னிலையில் அம்ருத் பால் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க சி.ஐ.டி. போலீசார் முன்வரவில்லை. அதே நேரத்தில் கூடுதல் டி.ஜி.பி. அம்ருத்பால் சார்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனு மீதான விசாரணையை நாளை (சனிக்கிழமை) ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.அதே நேரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு தொடர்பாக அம்ருத் பாலிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த நீதிபதியிடம் போலீசார் அனுமதி கேட்டனர்.
இதற்கு அம்ருத் பால் தரப்பில் ஆஜரான வக்கீல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தற்போது உடல் நல பாதிப்பு காரணமாக அவதிப்படுவதால், அவருக்கு பரிசோதனை நடத்த அனுமதி வழங்க கூடாது என்று வக்கீல் கூறினார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி உண்மை கண்டறியும் பரிசோதனை தற்போது நடத்த அனுமதி அளிக்க மறுத்து விட்டார்.
சிறையில் அடைப்பு
மேலும் கூடுதல் டி.ஜி.பி. அம்ருத் பாலை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கும்படி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். அதே நேரத்தில் உடல்நலக்குறைவு காரணமாக அவர் அவதிப்படுவதால், சிறையில் அடைக்கப்பட்டு இருந்தாலும் வீட்டு உணவை வழங்கவும், தினமும் அரை மணிநேரம் குடும்பத்தினரை சந்தித்து பேசுவதற்கும் நீதிபதி அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பின்னர் அம்ருத் பால் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை(சனிக்கிழமை) நடைபெற உள்ளதால், ஜாமீனை எதிர்பார்த்து அவர் காத்திருக்கிறார்.