அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் கமிஷன் அங்கீகாரம்
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் கமிஷன் அங்கீகாரம் அளித்துள்ளது. இரட்டை இலை சின்னமும் அவரது தரப்புக்கு உறுதியாகி உள்ளதால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
புதுடெல்லி,
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் அ.தி.மு.க.வை வழிநடத்தி வந்தனர்.
பொதுக்குழு
பெரும்பான்மையினர் கட்சிக்கு ஒற்றை தலைமையே வேண்டும் என்று வலியுறுத்தியதால் கட்சிக்குள் மோதல் ஏற்படத்தொடங்கியது. ஆனால் இதற்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந்தேதி சென்னை வானகரத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர்.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
இதனை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த தனி நீதிபதி பொதுக்குழு செல்லாது என்று தீர்ப்பு அளித்தார்.
இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இதனை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, அ.தி.மு.க. சட்ட விதிகளுக்கு உட்பட்டே பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளது என்று கூறி பொதுக்குழு செல்லும் என்று உத்தரவிட்டனர்.
இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்று அதிரடியாக கடந்த பிப்ரவரி மாதம் தீர்ப்பு கூறினார். இந்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி தரப்பை உற்சாகப்படுத்தியது.
பொதுச்செயலாளராக பொறுப்பேற்பு
இதனையடுத்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இதில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து பொதுக்குழுவையும், பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுத்ததையும் அங்கீகரிக்க வேண்டும் என தேர்தல் கமிஷனில் அ.தி.மு.க. சார்பில் மனு அளிக்கப்பட்டது.
ஐகோர்ட்டில் வழக்கு
இதுதவிர அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட கோரி, டெல்லி ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் தேர்தல் கமிஷன் உரிய முடிவை எடுத்து 21-ந் தேதிக்குள் (இன்று) தெரிவிக்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
ஆலோசனை
அதன் அடிப்படையில் தேர்தல் கமிஷன் நேற்று முன்தினம் அதற்கான ஆலோசனையை நடத்தியது.
எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது, புதிய நிர்வாகிகள் தேர்வு மற்றும் கட்சி விதிகளில் செய்யப்பட்ட திருத்தங்கள் தொடர்பாக ஒரு அமர்விலும், கர்நாடக சட்டசபை தேர்தலில் சின்னம் வழங்குவது தொடர்பாக மற்றொரு அமர்விலும் அதிகாரிகள் விவாதித்தனர்.
இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இது பற்றி நேற்று எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
பொதுச்செயலாளர் அங்கீகாரம்
அந்த கடிதத்தின் வாயிலாக, எடப்பாடி பழனிசாமிக்கே தற்போதைக்கு அதிகாரம் வழங்கப்பட்டு இருப்பதாக தெரிய வருகிறது. அதாவது கட்சியின் சட்ட விதிகளில் செய்யப்பட்ட திருத்தங்கள் மற்றும் நிர்வாகிகள் மாற்றம் தொடர்பான எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கை ஏற்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
அதன்படி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் கமிஷன் அங்கீகரித்துள்ளது. மேலும் புதிய நிர்வாகிகள் நியமனமும் செல்லும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆனால் அதே சமயம் கோர்ட்டு உத்தரவுக்கு உட்பட்டு தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்படுவதாக அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.
இரட்டை இலை சின்னம்
அதைப்போல கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு சின்னம் கோரியதற்கு பதில் அளிக்கும் கடிதத்தில், இரட்டை இலை சின்னம் கர்நாடக தேர்தலுக்கு ஒதுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதன் மூலம் இரட்டை இலை சின்னமும் எடப்பாடி பழனிசாமிக்கு உறுதியாகி உள்ளது.
தொண்டர்கள் கொண்டாட்டம்
எடப்பாடி பழனிசாமியை தேர்தல் கமிஷன் அங்கீகரித்து இருப்பதை அ.தி.மு.க. தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
கட்சியின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள சென்னை ராயப்பேட்டையில் நேற்று தொண்டர்கள் உற்சாகமாக கோஷம் எழுப்பி மகிழ்ந்தனர்.
தேர்தல் ஆணையம் சாதுர்ய பதில்
2 கடிதங்களிலும் மிகவும் சாதுர்யமாக தேர்தல் கமிஷன் பதில் தந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. அதாவது கட்சி சட்ட விதி திருத்தம் ஏற்பு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பெயரிட்டு நேரடியாக கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
அதில் அவரது பெயருக்கு பின்னால் பொதுச்செயலாளர் என்கிற பதவி குறிப்பிடப்படவில்லை. இந்த கடிதம் ராயப்பேட்டை அலுவலக முகவரியிட்டு அனுப்பப்பட்டுள்ளது.
அதைப்போல கர்நாடக தேர்தலில் இரட்டை இலை சின்னம் தொடர்பான கடிதம், கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. அதன் நகல் எடப்பாடி பழனிசாமி பெயருக்கு அனுப்பப்படவில்லை. அ.தி.மு.க. பொதுச்செயலாளர், ராயப்பேட்டை அலுவலகம் என குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஓ.பன்னீர்செல்வத்துக்கு பின்னடைவு
பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் கமிஷன் அங்கீகரித்து இருப்பது ஓ.பன்னீர்செல்வத்துக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக தேர்தலில் 3 இடங்களில் போட்டியிடுவதாக அவர் அறிவித்துள்ளார். எனவே அவருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்க வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது.