துணிக்கடை உரிமையாளரை கத்தியால் குத்திய வழக்கில் கைதானவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய ஆலோசனை- கூடுதல் டி.ஜி.பி. அலோக்குமார்
சிவமொக்காவில் துணிக்கடை உரிமையாளரை கத்தியால் குத்திய வழக்கில் கைதானவர்களின் சொத்துக்களை பறிமுதல் ெசய்வது குறித்து ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்று கூடுதல் டி.ஜி.பி. அலோக்குமார் தெரிவித்துள்ளார்.
சிவமொக்கா: சிவமொக்காவில் துணிக்கடை உரிமையாளரை கத்தியால் குத்திய வழக்கில் கைதானவர்களின் சொத்துக்களை பறிமுதல் ெசய்வது குறித்து ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்று கூடுதல் டி.ஜி.பி. அலோக்குமார் தெரிவித்துள்ளார்.
கூடுதல் டி.ஜி.பி. ஆய்வு
கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் நடந்த வன்முறை சம்பவத்தை தொடர்ந்து நேற்று கூடுதல் டி.ஜி.பி. (சட்டம்-ஒழுங்கு) அலோக் குமார், சிவமொக்காவுக்கு வந்தார். மோதல் சம்பவத்தால் நகரில் பதற்றம் நிலவும் பகுதிகளுக்கு கூடுதல் டி.ஜி.பி. அலோக் குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் கலெக்டர் செல்வமணி, ஐ.ஜி. தியாகராஜன், போலீஸ் சூப்பிரண்டு லட்சுமி பிரசாத் ஆகியோரும் சென்றனர். இதையடுத்து கூடுதல் டி.ஜி.பி. அலோக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
நிலைமை கட்டுக்குள் உள்ளது
ராஜஸ்தானை சேர்ந்த பிரேம் சிங்கை கத்தியால் குத்திய வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஜபிஉல்லா என்பவர் போலீசாரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றபோது, துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டுள்ளார். பிரேம் சிங்கை கத்தியால் குத்திய ஜபிஉல்லா, சுதந்திர தின விழாவில் அமீர் அகமது சர்க்கிளில் வன்முறையில் ஈடுபட்டவர் ஆவார்.
இவ்வழக்கில் மேலும் சிலர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். விரைவில் அவர்கள் கைது ெசய்யப்படுவார்கள். தற்போது நகரில் நிலைமை கட்டுக்குள் உள்ளது.
சொத்துக்களை பறிமுதல் செய்வது...
வன்முறை சம்பவத்தில் சிலரை பிடித்து விசாரித்து வருகிறோம். அதில் வன்முறையில் ஈடுபட்டது தெரியவந்தால், அவர்கள் கைது செய்யப்படுவார்கள். கத்திக்குத்து சம்பவத்தில் கைதான 3 பேருக்கும் அரசியல் தொடர்பு அல்லது எந்த அமைப்புடனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். துணிக்கடை உரிமையாளரை கத்தியால் குத்திய வழக்கில் கைதானவா்களின் சொத்துக்களை பறிமுதல் ெசய்வது குறித்து கலெக்டருடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும்.
சிவமொக்காவில் 18-ந்தேதி (நாளை) வரை 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. நகரில் சட்டம்-ஒழுங்கை கண்காணிக்க ஒரு போலீஸ் சூப்பிரண்டு, 3 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 3 சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் 10 இன்ஸ்பெக்டர்கள் சிவமொக்காவுக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.