விமான நிலையங்களில் குரங்கு அம்மை நோய் பரிசோதனையை கடுமையாக்க மத்திய அரசு அறிவுறுத்தல்
சர்வதேச பயணிகளுக்கு கடுமையான சுகாதார பரிசோதனையை உறுதி செய்யுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
புதுடெல்லி,
நாட்டிலேயே முதல் முறையாக கேரளாவில் குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்த 35 வயது நபருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் குரங்கு அம்மை நோய் உறுதிசெய்யப்பட்டது. அதை தொடர்ந்து இன்று கேரளாவின் கன்னூரைச் சேர்ந்த 31 வயது நபருக்கு குரங்கு அம்மை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் நாட்டில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆனது.
இந்த நிலையில் நாட்டில் உள்ள விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் அனைத்து சர்வதேச பயணிகளுக்கும் கடுமையான சுகாதார பரிசோதனையை உறுதி செய்யுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் விமான நிலையம் மற்றும் துறைமுக சுகாதார அதிகாரிகள், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் அலுவலகங்களைச் சேர்ந்த பிராந்திய இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.
அந்த கூட்டத்தில் இந்தியாவில் மக்கள் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் அபாயத்தைக் குறைக்கும் வகையில் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் வரும் அனைத்து சர்வதேச பயணிகளுக்கு கடுமையான உடல்நலப் பரிசோதனையை உறுதி செய்யுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.