உயர்அழுத்த மின்கம்பியில் கைபட்டதால்


உயர்அழுத்த மின்கம்பியில் கைபட்டதால்
x

பெங்களூருவில், வீட்டின் மாடியில் நின்று பட்டம் விட்டபோது உயர்அழுத்த மின்கம்பியில் கைபட்டு மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் நடந்து உள்ளது.

பெங்களூரு:-

மின்சாரம் தாக்கி சாவு

பெங்களூரு ஆர்.டி.நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சாமுண்டிநகரில் வசித்து வரும் ஒரு தம்பதியின் மகன் அபுபக்கர் (வயது 11). இந்த சிறுவன் தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு வந்த அபுபக்கர் வீட்டின் மாடியில் நின்று பட்டம் விட்டு விளையாடி கொண்டு இருந்தான்.

அப்போது அந்த வழியாக சென்ற உயர்அழுத்த மின்கம்பி மீது அபுபக்கரின் கைபட்டு விட்டது. இதனால் அவனை மின்சாரம் தாக்கியது. இதில் உடல்கருகி உயிருக்கு போராடிய அபுபக்கரை அவனது குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெங்களூரு விக்டோரியா ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் அபுபக்கர் 80 சதவீதத்திற்கு மேல் தீக்காயம் அடைந்து இருந்ததால் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலை உயிரிழந்தான்.

பெஸ்காம் மீது குற்றச்சாட்டு

இதுபற்றி அறிந்ததும் ஆர்.டி.நகர் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று அபுபக்கர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் பெஸ்காம் அதிகாரிகள் அலட்சியத்தால் தான் அபுபக்கர் உயிரிழந்து விட்டதாக குடும்பத்தினர் குற்றச்சாட்டு கூறியுள்ளனர். மேலும் பெஸ்காம் நிர்வாகம் மீது புகார் அளித்த போது அந்த புகாரை வாங்க ஆர்.டி.நகர் போலீசார் தயக்கம் காட்டியதாகவும் அபுபக்கரின் குடும்பத்தினர் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.

மேலும் ஆர்.டி.நகர் பகுதியில் மாடி வீடுகளுக்கு மிக அருகில் உயர் அழுத்த மின்கம்பிகள் செல்வதாகவும், இதனால் உயிரிழப்புகள் அடிக்கடி ஏற்படுவதாகவும், இதுகுறித்து பெஸ்காம் அதிகாரிகளிடம் கூறியும் அவர்கள் கண்டுகொள்வது இல்லை என்றும் குடியிருப்புவாசிகள் குற்றச்சாட்டினர். அபுபக்கர் உயிரிழந்த சம்பவம் குறித்து ஆர்.டி.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சாமுண்டிநகர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story