நவநகரில் கணவர் கொல்லப்பட்டதை அடுத்து தற்கொலை செய்து கொண்ட பெண் எழுதிய கடிதம் போலீசாரிடம் சிக்கியது
உப்பள்ளி நவநகரில் கணவர் கொல்லப்பட்டதை அடுத்து தற்கொலை செய்து கொண்ட பெண் கைப்பட எழுதிய கடிதம் போலீசாரிடம் சிக்கி உள்ளது.
உப்பள்ளி;
கொலை
தார்வார் மாவட்டம் உப்பள்ளியை அடுத்த ராயநாலா கிராமத்தைச் சேர்ந்தவர் தீபக் பண்டாரி. அவர் கிராம பஞ்சாயத்து உறுப்பினராக இருந்து வந்தார். இவரது மனைவி புஷ்பா. இந்த நிலையில் தீபக் பண்டாரி கடந்த ஜூலை மாதம் 4-ந்தேதி வெளியே சென்று வீடு திரும்பியபோது 8 பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்தி கொலை செய்தது.
இதுகுறித்து தீபக்கின் சகோதரர் சஞ்சய் உப்பள்ளி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் 6 பேரை கைது செய்தனர். இதில் முக்கிய குற்றவாளியை கைது செய்யவில்லை என தீபக்கின் மனைவி புஷ்பா குற்றம் சாட்டினார். மேலும் புஷ்பா மற்றும் சஞ்சய் ஆகிய இருவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தற்கொலை
இதையடுத்து இவ்வழக்கு சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில், புஷ்பா முக்கிய சாட்சி என்பதால் அவரிடம் ஒருமுறை சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை முடிவடைந்த மறுநாளே புஷ்பா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து நவநகர் போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர். இதையடுத்து புஷ்பாவின் தந்தை பசப்பா, நவநகர் போலீசில் புகார் அளித்தார். அதில் தனது மகளின் தற்கொலைக்கு தீபக்கின் குடும்பத்தினர்தான் காரணம் என்று புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வந்தனர்.
தீய அரசாங்கம்
இந்த நிலையில் போலீசார் வீட்டில் சோதனை செய்யும் போது புஷ்பா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு எழுதிவைத்த கடிதம் ஒன்று போலீசாரிடம் சிக்கியது. அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி பாா்த்துள்ளனர். அதில், 'என் கணவர் தீபக் பண்டாரியை மேட்டி வீட்டு குடும்பத்தினரான எல்லப்பா, நவீன், குமார் மற்றும் ருத்ரப்பா ஆகியோர்தான் கொலை செய்தார்கள்.
நீதி வழங்கும் போலீஸ்காரர்கள், எனக்கு நியாயம் வழங்காததால் நான் மனமுடைந்து போனேன். நீதி கிடைக்காத நிலையில் அந்த தீய அரசாங்கம் மீது நம்பிக்கை இல்லை. இதனால் தான் தற்கொலை செய்து கொள்கிறேன். நான் இறந்த பிறகாவது போலீஸ் அதிகாரிகள் என் கணவரை கொன்ற பாவிகளை கைது செய்து ஆயுள் தண்டனை வழங்கவேண்டும்' என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். இதுகுறித்து நவநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.