சிவமொக்கா விமான நிலையத்தில் விமானப்படை விமானங்கள் சோதனை ஓட்டம்


சிவமொக்கா விமான நிலையத்தில் விமானப்படை விமானங்கள் சோதனை ஓட்டம்
x
தினத்தந்தி 23 Feb 2023 12:15 AM IST (Updated: 23 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிவமொக்கா விமான நிலையத்தில் இந்திய விமானப்படை விமானங்கள் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது.

சிவமொக்கா-

சோகானே விமான நிலையம்

சிவமொக்கா மாவட்டம் சோகானே பகுதியில் புதிய விமான நிலையம் கட்டும் பணிகள் முடிந்துள்ளது. ரூ.400 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த விமான நிலையத்தின் மேற்பகுதி தாமரை பூ வடிவில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

வருகிற 27-ந் தேதி (திங்கட்கிழமை) இந்த புதிய விமான நிலையம் திறப்பு விழா நடக்கிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக விமான நிலையத்தை திறந்து வைக்கிறார். இந்த விமான நிலையத்திற்கு கர்நாடகத்தின் தேசிய கவி குவெம்பு பெயர் சூட்டப்படுகிறது.

இந்த நிலையில் புதிய விமான நிலையத்தின் உள்பாதுகாப்பு கட்டமைப்பு குறித்த ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக விமான நிலையம் முழுவதும் சிறப்பு பாதுகாப்பு படையினர் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதையடுத்து சிறப்பு பாதுகாப்பு படையினர் உதவியுடன் இந்திய விமானப்படைய சேர்ந்த அதிகாரிகள் விமான சோதனை ஓட்டம் நடத்தினர். அதாவது அவர்கள் விமான நிலைய ஓடுபாதையில் விமானத்தை தரையிறக்குவது மற்றும் கட்டுப்பாட்டு பிரிவுகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தினர்.

விமானப்படை விமானம் சோதனை ஓட்டம்

இதற்காக இந்திய விமானப்படையை சேர்ந்த போயிங் 737 மற்றும் 7.எச்.1 ஆகிய விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த விமானங்கள் அதிவேகத்தில் வந்து, ஓடு பாதையில் தரையிறங்கியது. பின்னர் ஓடுபாதையில் இருந்து மீண்டும் உயரப்பறந்து சென்றது.

இந்தநேரத்தில் விமான ஓடுபாதை மற்றும் கட்டுப்பாட்டு பிரிவில் எந்த தடையும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சோகானே விமான நிலையத்தில் பிற விமானங்கள் வந்து இறங்க ஏற்றவை என்பதை சிறப்பு பாதுகாப்பு படையினர் உறுதி செய்தனர்.

கர்நாடக வரலாற்றில் முதல்முறை

இதற்கிடையில் விமான நிலைய பராமரிப்பு பணிகளை கர்நாடக வரலாற்றில் முதன் முறையாக மத்திய அரசு கர்நாடக தொழில் வளர்ச்சித்துறை வாரியத்திற்கு (கே.எஸ்.ஐ.டி) அளித்துள்ளது. இதுவரை விமான நிலையப் பராமரிப்பு பணிகள் மாநில அரசிற்கு வழங்கியது இல்லை என்று கூறப்படுகிறது.

அதேபோல விமான நிலையத்தின் தொழில்நுட்ப பணிகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பொறுப்புகள் மத்திய விமானத்துறை ஆணையத்திற்கு வழங்கப்பட்டு உள்ளது. அவர்கள் தொழில்நுட்ப கோளாறு மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் பார்த்துக்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

27-ந் தேதி திறப்பு விழா

இதுகுறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்த ராகவேந்திரா எம்.பி. கூறியதாவது:-

சோகானே விமான நிலையத்தில் அனைத்து பணிகளும் முடிந்துவிட்டது. சோதனை ஓட்டத்தில் இந்திய விமானப்படை விமானங்கள் ஈடுபட்டன. அது வெற்றிகரமாக நடந்து முடிந்தது. விமான நிலையத்தில் எந்தவிதமான தொழில்நுட்ப தடைகள் இல்லை என்பதும், விமானங்களை இயக்க இந்த ஓடுதளம் சிறப்பாக இருப்பது உறுதியாகியுள்ளது. இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்துள்ளது.

இதையடுத்து திட்டமிட்டப்படி வருகிற 27-ந் தேதி விமான நிலைய திறப்பு விழா நடைபெறும். பிரதமர் மோடி விமான நிலையத்தை திறந்து வைக்கிறார். இதற்காக அவர் அன்றையதினம் காலை சிறப்பு விமான மூலம் சிவமொக்காவிற்கு வருகிறார். விமான நிலைய திறப்பு விழா நிகழ்ச்சி முடிந்ததும், அவர் பெலகாவிக்கு செல்ல இருக்கிறார்.

இதற்கிடையில் இந்த விமான நிலைய திறப்பு விழா நிகழ்ச்சியில் மத்திய மந்திரி ஜோதி ராய் சிந்தியா, பிரகலாத் ஜோஷி, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story