பெங்களூரு- சிவமொக்கா இடையே விமான சேவை தொடங்கியது
பெங்களூரு-சிவமொக்கா இடையே விமான சேவை தொடங்கியது. இதில், மந்திரி எம்.பி.பட்டீல், எடியூரப்பா அருகருகே அமர்ந்து பயணம் செய்தனர்.
சிவமொக்கா-
பெங்களூரு-சிவமொக்கா இடையே விமான சேவை தொடங்கியது. இதில், மந்திரி எம்.பி.பட்டீல், எடியூரப்பா அருகருகே அமர்ந்து பயணம் செய்தனர்.
விமான நிலையம்
மலைநாடு மாவட்டம் என அழைக்கப்படும் சிவமொக்காவில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தநிலையில் கடந்த 2019-ம் ஆண்டு சிவமொக்கா மாவட்டம் சோகானே பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதற்கான நிதியும் மத்திய அரசு ஒதுக்கியது.
இதையடுத்து சிவமொக்கா டவுனில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சோகானே பகுதியில் ரூ.450 கோடி செலவில் புதிய விமான நிலையம் கட்டப்பட்டது. மேலும் 3,050 மீட்டர் நீளம் கொண்ட ஓடுபாதையும் அமைக்கப்பட்டன. பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு அடுத்தப்படியாக மிக நீளமான ஓடுபாதை கொண்டது சோகானே விமான நிலையம். இந்த விமான நிலையத்தின் மேற்பகுதி தாமரை பூ வடிவில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து இந்திய விமானப்படையை சேர்ந்த அதிகாரிகள் விமான சோதனை ஓட்டம் நடத்தினர்.
அதாவது அவர்கள் விமான நிலைய ஓடுபாதையில் விமானத்தை தரையிறக்குவது மற்றும் கட்டுப்பாட்டு பிரிவுகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தினர். இந்தநிலையில் முன்னாள் முதல்- மந்திரி எடியூரப்பா பிறந்த நாளான கடந்த பிப்ரவரி மாதம் 27-ந் தேதி சிவமொக்கா விமான நிலையத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
சேவை தொடங்கவில்லை
ஆனால் விமான போக்குவரத்து சேவை தொடங்கவில்லை. இதையடுத்து சிவமொக்கா எம்.பி. ராகவேந்திரா விமான சேவையை தொடங்கக்கோரி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தார். இந்தநிலையில் சிவமொக்காவில் விமான போக்குவரத்து சேவை தொடங்க மத்திய அரசு அனுமதி வழங்கியது.
இந்தநிலையில் விமான போக்குவரத்து சேவை நேற்று தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான டிக்கெட் விற்பனை நடந்து முடிந்தது. இந்தநிலையில், நேற்று பெங்களூரு- சிவமொக்கா இடையே முதல் விமான போக்குவரத்து சேவை தொடங்கியது. இந்த போக்குவரத்து சேவையை தொழில்துறை உள்கட்டமைப்பு துறை மந்திரி எம்.பி.பட்டீல் தொடங்கி வைத்தார்.
வளர்ச்சி அடையும்
பின்னர் அவர் பேசுகையில், பெங்களூரு- சிவமொக்கா விமான போக்குவரத்தால் சிவமொக்கா மாவட்டத்தின் சுற்றுலாத்துறை, தொழில் வளம், ஏற்றுமதி, இறக்குமதி போன்ற தொழில்களும், ஓட்டல் மற்றும் பல்வேறு வியாபாரங்கள் பெரிதும் வளர்ச்சி அடையும் என்றார்.
விழாவில் கலந்து கொண்ட முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா பேசுகையில், சிவமொக்கா விமான போக்குவரத்து சேவையால் மலைநாடு மாவட்ட மக்கள் பயன் அடைவார்கள். தற்போது சிவமொக்காவில் இருந்து பெங்களூருவுக்கு விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.
விரைவில் வெளிநாடுகளுக்கு செல்ல இந்த விமான நிலையம் ஒரு மையமாக செயல்படும். சிவமொக்கா மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவு இன்று நிறைவேறி உள்ளது. சிவமொக்கா விமான போக்குவரத்துக்கு சேவையை கொண்டு வர கடும் முயற்சி செய்த ராகவேந்திரா எம்.பி.யை பாராட்டுகிறேன், என்றார்.
கலந்து கொண்டவர்கள்
விழாவில், கல்வித்துறை மந்திரி மதுபங்காரப்பா, சிவமொக்கா எம்.பி. ராகவேந்திரா, எம்.எல்.ஏ.க்கள் சாரதா பூரியா நாயக், சன்னபசப்பா, பேளூர் கோபாலகிருஷ்ணா, டி.எஸ்.அருண் எம்.எல்.சி., சிவமொக்கா மாவட்ட கலெக்டர் செல்வமணி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மிதுன் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பெங்களூருவில் இருந்து விமானம் நேற்று காலை 9.45 மணிக்கு புறப்பட்டு காலை 11.05 மணிக்கு சிவமொக்கா விமான நிலையத்தை வந்தடைந்தது. இந்த விமானத்தில் மந்திரி எம்.பி.பட்டீல், எடியூரப்பா, ராகவேந்திரா எம்.பி., சன்னபசப்பா, ஈசுவரப்பா, அரக ஞாேனந்திரா, விஜயேந்திரா ஆகியோர் வந்தனர். இதில் எடியூரப்பா, மந்திரி எம்.பி.பட்டீல் அருகருகே அமர்ந்து பயணம் செய்தனர்.
சிவமொக்கா விமான நிலையத்திற்கு முதல் முறையாக வந்திறங்கிய விமானத்திற்கு தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து 'வாட்டர் சல்யூட்' செய்தனர்.
கன்னட மொழி புறக்கணிப்பு
பெங்களூருவில் இருந்து சிவமொக்காவிற்கு முதல்முறையாக விமான சேவை நேற்று தொடங்கியது. இதற்காக சிவமொக்கா விமான நிலையத்தில் நேர கால அட்டவணை (டிஜிட்டல் திரை) அமைக்கப்பட்டுள்ளது. இதில் விமானம் செல்லும் நேரம் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அந்த நேர கால அட்டவணையில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி மட்டுமே இடம் பெற்று உள்ளது. இதற்கு கன்னட அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இதுகுறித்து மந்திரி எம்.பி.பட்டீலிடம் கேட்டபோது விமான நிலைய அதிகாரிகளுடன் பேசி கன்னட மொழியை நேர கால அட்டவணையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.