ஒட்டுமொத்த இந்தியாவே பா.ஜனதாவின் ஏ.டி.எம்.ஆக மாறிவிட்டது; அமித்ஷாவுக்கு குமாரசாமி பதிலடி
ஒட்டுமொத்த இந்தியாவே பா.ஜனதாவின் ஏ.டி.எம்.ஆக மாறிவிட்டது என்று கூறி அமித்ஷாவுக்கு குமாரசாமி பதிலடி கொடுத்துள்ளார்.
பெங்களூரு:
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
கூச்சம் வேண்டாமா?
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மண்டியா மக்களை பா.ஜனதா பக்கம் இழுக்க முயற்சி செய்துள்ளார். அவரது கட்சியினர் எங்களை பற்றி விமர்சனம் செய்கிறார்கள். அதே போல் அமித்ஷாவும் எங்கள் கட்சியை விமர்சித்துள்ளார். ஆனால் மண்டியா மக்களை ஏமாற்ற முடியாது. ஜனதா தளம்(எஸ்) ஆட்சிக்கு வந்தால் அரசை குடும்ப ஏ.டி.எம். ஆக பயன்படுத்துவதாக கூறியுள்ளார்.
பேய் வாயில் பகவத் கீதை என்றால் அது இது தான். பொய் பேசுவதற்கு கூச்சம் வேண்டமா?. கர்நாடகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவே பா.ஜனதாவின் ஏ.டி.எம். ஆக மாறிவிட்டது. இது பொய்யா?. யாருக்கு எது ஏ.டி.எம். என்பது கர்நாடகத்திற்கு தெரியும். 40 சதவீத கமிஷன் யாருடைய ஏ.டி.எம்.க்கு சென்றது?. கொரோனா காலத்தில் கொள்ளையடித்த பணம் யாருடைய உண்டியலுக்கு சென்றது?. ஆபரேஷன் தாமரைக்கு யாருடைய ஏ.டி.எம்.ல் இருந்து பணம் வந்தது?.
யார் நம்புவார்கள்
இன்று (நேற்று) தேவராயனதுர்காவில் ஒப்பந்ததாரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சாவுக்கும், 40 சதவீத கமிஷன் காரணம் என்று சொல்லப்படுகிறது. இதற்கு அமித்ஷா பதில் கூறுவாரா?. பா.ஜனதா என்றால் ஏ.டி.எம்.களின் தேசிய குழு. உண்மை இவ்வாறு இருக்க எங்கள் கட்சியை குறை சொன்னால் அதை யார் நம்புவார்கள்.
ராமர்கோவில் கட்டியுள்ளோம் என்கிறீர்கள். இது பா.ஜனதாவின் சாதனையா?. இதில் இந்தியர்கள் அனைவரின் காணிக்கை இல்லையா?. நீங்கள் (பா.ஜனதா) மட்டுமே பெயர் எடுத்து கொள்ள வேண்டாம். ஒருபுறம் கோவில்களை பாதுகாப்பாக சொல்கிறீர்கள். மற்றொருபுறம் கடவுள்களை வெட்கம் இல்லாமல் அரசியலுக்கு பயன்படுத்துகிறீர்கள். நான் மேற்கொண்டுள்ள பஞ்சரத்னா யாத்திரைக்கு மக்கள் வழங்கும் ஆதரவை கண்டு நீங்கள் பயப்படுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.
இவ்வாறு குமாரசாமி குறிப்பிட்டுள்ளார்.