அமைதியை உறுதி செய்யும் பொறுப்பு அனைத்து கட்சிகளுக்கும் உள்ளது; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி
அமைதியை உறுதி செய்யும் பொறுப்பு அனைத்து கட்சிகளுக்கும் உள்ளது என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
வீரசாவர்க்கர், திப்பு சுல்தான் போன்ற தலைவர்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் உள்ளன. இது வரலாற்று உண்மைகளாக இருப்பதால் விவாதங்கள் நடைபெறுவது இயல்பானது ஆகும். ஆனால் அவற்றை பகுத்தாய்ந்து பகுத்தறிவுடன் நியாயப்படுத்த வேண்டும். இத்தகைய பிரச்சினைகளை தெருவில் விவாதித்து சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த கூடாது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, வீரசாவர்க்கரை நாட்டின் பெருமைமிகு மகன் என்று பாராட்டினார். ஜனநாயகத்தில் எந்த ரீதியில் எந்த அளவுக்கு விவாதிக்க வேண்டும் என்பதை அனைவரும் அறிந்து அதன்படி நடக்க வேண்டும். இதை புரிந்து கொண்டால் கருத்து வேறுபாடுகள் இடையேயும் பணியாற்ற முடியும். எதிர்க்கட்சி தலைவர் காரின் மீது முட்டை வீசிய விவகாரத்தில் சட்டப்படி விசாரணை நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சி தலைவருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இந்த விவகாரத்திற்கு அரசியல் சாயம் பூசப்படுகிறது. அமைதியை உறுதி செய்யும் பொறுப்பு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உள்ளது.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.