முதல்-மந்திரி அலுவலக அதிகாரிகளுக்கு துறைகள் ஒதுக்கீடு- கர்நாடக அரசு உத்தரவு


முதல்-மந்திரி அலுவலக அதிகாரிகளுக்கு துறைகள் ஒதுக்கீடு-  கர்நாடக அரசு உத்தரவு
x

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அலுவலக அதிகாரிகளுக்கு துறைகளை கவனிக்கும் பொறுப்பு ஒதுக்கீடு செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு: முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அலுவலக அதிகாரிகளுக்கு துறைகளை கவனிக்கும் பொறுப்பு ஒதுக்கீடு செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

மஞ்சுநாத் பிரசாத்

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு துறைகளின் பொறுப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி முதல்-மந்திரியின் முதன்மை செயலாளர் மஞ்சுநாத் பிரசாத்திற்கு போலீஸ், நிர்வாக சீர்திருத்தம், நிதி, வருவாய், சமூக நலன், பிற்படுத்தப்பட்டோர் நலன், சிறுபான்மையினர் நலன், சட்டம்-சட்டசபை விவகாரம், செய்தி-மக்கள் தொடர்பு, வணிகம், தொழில், போக்குவரத்து, நீர் பிரச்சினைகள், உள்கட்டமைப்பு, மத்திய அரசுக்கு பதில் அனுப்புவது, மேற்கண்ட துறைகள் தொடர்பாக மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் பெறும் பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

முதல்-மந்திரியின் செயலாளருக்கு விவசாயம், தோட்டக்கலை, பட்டு, தொழிலாளர் நலன், நகர வளர்ச்சி, சிறுதொழில், சுகாதாரம், மருத்துவ கல்வி, உயர்கல்வி, சுற்றுலா, மின்சாரம், வனம், மின்னணு நிர்வாகம் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன. முதல்-மந்திரியின் இணை செயலாளர் ஜெகதீசுக்கு சர்க்கரை, ஜவுளி, கால்நடை, உணவு, துறைமுகம், வீட்டு வசதி, கூட்டுறவு, திட்டமிடல், கன்னட வளர்ச்சி, பெண்கள்-குழந்தைகள் நலன், விளையாட்டு, கிராம வளர்ச்சி, ஹாவேரி மாவட்ட எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் தொகுதி வளர்ச்சி, சட்டசபை விவகாரம், பொதுமக்கள் குறை தீர்ப்பு ஆகிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

அனில்குமார்

முதல்-மந்திரியின் தனி செயலாளர் அனில்குமாருக்கு நீர்ப்பாசனம், சிறிய நீர்ப்பாசனம், பொதுப்பணி, முதல்-மந்திரியுடன் முக்கிய பிரமுகர்கள் சந்திப்பது, முதல்-மந்திரியின் விழாக்கள், முதல்-மந்திரியின் கூட்டும் கூட்டத்தை ஒருங்கிணைப்பது ஆகிய பணிகள் வழங்கப்பட்டுள்ளன. முதல்-மந்திரியின் சிறப்பு அதிகாரி ரங்கராஜூவுக்கு அலுவல்சாரா உறுப்பினர்கள் நியமனம், முதல்-மந்திரியின் இல்ல நிர்வாகம், கிருஷ்ணா இல்லத்தில் அதிகாரிகளை ஒருங்கிணைப்பது, முதல்-மந்திரி அலுவலகத்திற்கு ஊழியர்களை நியமனம் செய்வது, எம்.பி., எம்.எல்.ஏ., எம்.எல்.சி.க்களின் வளர்ச்சி திட்ட பணிகளை கவனிப்பது உள்ளிட்ட பணிகளை நிர்வகிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

முதல்-மந்திரியின் இன்னொரு சிறப்பு அதிகாரி சன்னபசவேசாவுக்கு முதல்-மந்திரியின் கூட்டங்களை கூட்டுவது, தினசரி நிகழ்ச்சிகளை கவனிப்பது, சுற்றுப்பயணம், தகவல், உயிரி தொழில்நுட்பம், அறிவியல், திறன் மேம்பாடு, முக்கியமான திட்ட பணிகளை கவனிப்பது, மேற்கண்ட துறைகள் தொடர்பான ஊழியர்களை பணி இடமாற்றத்தை கவனிக்கும் பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. முதல்-மந்திரியின் மற்றொரு சிறப்பு அதிகாரி சதீசுக்கு கிருஷ்ணா இல்லத்தை நிர்வகிக்கும் பொறுப்பு வழங்கி கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.


Next Story