கர்நாடக சட்டசபை தேர்தலில் நடிகர் உபேந்திரா கட்சிக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கீடு; தேர்தல் ஆணையம் அறிவிப்பு


கர்நாடக சட்டசபை தேர்தலில் நடிகர் உபேந்திரா கட்சிக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கீடு; தேர்தல் ஆணையம் அறிவிப்பு
x
தினத்தந்தி 25 Feb 2023 12:15 AM IST (Updated: 25 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக சட்டசபை தேர்தலில் நடிகர் உபேந்திரா கட்சிக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு:

கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் உபேந்திரா. இவர், தமிழிலில் நடிகர் விஷால் நடித்திருந்த சத்யம் படத்திலும் நடித்திருந்தார். கடந்த 2013-ம் ஆண்டு கர்நாடக சட்டசபைக்கு நடந்த தேர்தலின் போது கே.பி.ஜி.பி என்ற கட்சி மூலமாக அரசியலில் ஈடுபட தொடங்கினார். அதன்பிறகு, கடந்த 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நடிகர் உபேந்திரா, உத்தம பிரஜாகியா என்ற கட்சியை தொடங்கினார். அவரது கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு தேர்தலிலும் களம் இறங்கி இருந்தார்கள். அதன்பிறகு, சில பிரச்சினைகளால் தனது கட்சியின் பெயரை பிரஜாகியா என்று உபேந்திரா மாற்றினார்.

இந்த நிலையில், வருகிற மே மாதம் நடைபெற உள்ள கர்நாடக சட்டசபை தேர்தலில் நடிகர் உபேந்திராவின் பிரஜாகியா கட்சி போட்டியிட தயாராகி வருகிறது. தங்களது கட்சிக்கு உரிய சின்னம் ஒதுக்கும்படி மாநில தேர்தல் ஆணையத்திடம் உபேந்திரா கேட்டு இருந்தார். இந்த நிலையில், நடிகர் உபேந்திராவின் கட்சிக்கு ஆட்டோ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி அறிவித்துள்ளது. இந்த தகவலை நடிகர் உபேந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பிரஜாகியா கட்சியின் மீது நம்பிக்கை இருந்தால், ஆட்டோ சின்னத்தில் வாக்களிக்கும்படியும் அவர் பதிவிட்டுள்ளார்.


Next Story