அமர்கோல் ஏ.பி.எம்.சி. மார்க்கெட்டில் சட்டவிரோதமாக பதுக்கிய ரூ.31¼ லட்சம் விதைகள் பறிமுதல்
அமர்கோல் ஏ.பி.எம்.சி. மார்க்கெட்டில் சட்டவிரோதமாக பதுக்கிய ரூ.31¼ லட்சம் விதைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
உப்பள்ளி;
உப்பள்ளி தாலுகா அமர்கோல் அருகே ஏ.பி.எம்.சி. மார்கெட் அமைந்துள்ளது. இந்த மார்க்கெட்டில் விதைகள் விற்பனை செய்யும் கடை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த கடைகளில் சட்டவிரோதமாக விதைகளை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி உப்பள்ளி-தார்வார் மாவட்ட விவசாய பொருட்கள் பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் மாவட்ட விவசாய பாதுகாப்பு துறை அதிகாரி ராகவேந்திரா தலைைமயிலான அதிகாரிகள் நேற்று திடீரென்று ஏ.பி.எம்.சி. மார்க்கெட்டில் இருந்த கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஒரு கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 32 குவிண்டால் மக்காசோளம் விதை, 26.75 குவிண்டால் பிற விதைகள் என ரூ.18.48 லட்சம் மதிப்பிலான விதைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோன்று மற்றொரு கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.12.85 லட்சம் மதிப்பிலான மக்காசோள விதைகள் உள்பட 63.20 குவிண்டால் விதைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இரண்டு கடைகளிலும் சேர்த்து ரூ.31.33 லட்சம் மதிப்புள்ள விதைகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.