அமர்நாத் மேகவெடிப்பு: இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க அதிநவீன ரேடார்களை பயன்படுத்தும் ராணுவம்
நிலச்சரிவு இடிபாடுகளுக்கு அடியில் உயிருடன் இருப்பவர்களை மீட்க அதிநவீன ரேடார்களை ராணுவம் பயன்படுத்துகிறது.
ஜம்மு,
அமர்நாத் யாத்ரீகர்களை மீட்கும் பணிகளில் அதிநவீன ரேடார்களை ராணுவம் பயன்படுத்துகிறது.
அமர்நாத் குகை கோவில் பகுதியில் மேகவெடிப்பு ஏற்பட்டு பெய்த கனமழையால் வெள்ளமும் நிலச்சரிவும் ஏற்பட்டது. அதில் கோவிலுக்கு யாத்திரை சென்றவர்கள் சிக்கி கொண்டனர். பக்தர்கள் தங்குவதற்காக போடப்பட்ட கூடாரங்களில் இருந்த பக்தர்களும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டனர். பலர் நிலச்சரிவு இடிபாடுகளில் சிக்கி கொண்டனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு படை, ராணுவம், எல்லை பாதுகாப்பு படை மற்றும் இந்தோ-திபெத் பாதுகாப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளத்தில் சிக்கியிருந்த 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடி வருகின்றனர்.
நிலச்சரிவு இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பவர்களை கண்டறிய கையடக்க வெப்ப இமேஜர்கள், இரவு தெளிவான பார்வைக்கான சாதனங்கள் , இரண்டு த்ரோ வால் ரேடார்கள் மற்றும் இரண்டு தேடல் மற்றும் மீட்பு நாய் படைகள் உள்ளிட்டவைகள் மூலம் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், நிலச்சரிவு இடிபாடுகளுக்கு அடியில் உயிருடன் இருப்பவர்களை கண்டுபிடிப்பதற்காக அதிநவீன "ஜேவர் 4000 ரேடார்" கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.